NEET: மருத்துவ கலந்தாய்விற்கு 1.50 லட்சம் போலி தரவரிசை சான்றிதழ் கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர்..!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் நீட் தேர்வு முடிவுப்படி தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடந்து வருகிறது. அதன்படி, நடைபெற்ற கலந்தாய்வில், மருத்துவம் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. அப்போது மாணவர் ஒருவர் தன்னுடைய பெயர் வரிசைப்படி ஏன் அழைக்கவில்லை என்று அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

பிறகு தகராறு செய்த மாணவனை அழைத்து அவர் வைத்திருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் தகராறு செய்த அந்த மாணவனின் பெயர் போலியாக தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆவணம் எனத் தெரிந்தது.

உடனே அதிகாரிகள் மாணவன் மற்றும் அவனுடன் வந்த அவரது தந்தையை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி காவல்துறை விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் எடுத்துள்ளார்.

பிறகு நீட் தேர்வில் 429 மதிப்பெண் பெற்றிருந்தார். தனக்கு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக மாணவனின் தந்தை, திருப்பத்தூர் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் வெங்கடாஜலபதி என்பவரிடம் ரூ.1.50 லட்சம் பணத்தை கொடுத்து மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்திருந்ததும், பல நாட்கள் தனது மகனின் பெயர் பட்டியலில் இல்லாததால், வெங்கடாஜலபதியிடம் தகராறு செய்ததும், அப்போது வெங்கடாஜலபதி நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்த மாணவனின் பெயரை எடிட் செய்து சேர்த்து அந்த போலி சான்றிதழை பதிவிறக்கம் செய்து மாணவனின் தந்தையிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் வெங்கடாஜலபதி கொடுத்த போலியான தரவரிசை சான்றிதழை எடுத்து கொண்டு மாணவன் மற்றும் அவரது தந்தை நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவன் அளித்த புகாரின் படி, போலி நீட் தேர்ச்சிக்கான தரவரிசை சான்றிதழை தயாரித்து கொடுத்த வெங்கடாஜலபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.