காதல் மனைவியை கொன்று.. இனோவா காரில் 2 நாள் ரவுண்டு அடித்த கணவன் கைது..!

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வழியாக சடலத்தை தூக்கி எறிவதற்கான இடம் எதுவுமே தெரியாமல் காரிலேயே சடலத்துடன் 2 நாள் குற்றாலம், தென்காசி, ஆயக்குடி, செங்கோட்டை என்று காரில் சுற்றி சுற்றி வந்து இறுதியாக இலத்தூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தில் வைத்து மனைவியை எரித்தவரை கைது செய்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியை அடுத்த இலத்தூரில் மதினாப்பேரியில் பாழடைந்த குளம் உள்ளது. இந்த பகுதி அருகே மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக இலத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க, அங்கு விரைந்து வந்த இலத்தூர் காவல்துறை, சம்பவ இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போதுதான், எரிந்து பிணமாக கிடந்தவர் பெண் என்பது தெரியவர, சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பாழடைந்த குளமும், மதுபாட்டில்களும் இறந்த நபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும் சடலம் கிடந்த இடத்தில் சில மதுபாட்டில்களும் கிடந்ததால், யாராவது பெண்ணை கடத்தி வந்து கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஆனால், எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் யாராவது பெண்கள் மாயமானதாக புகார் பதிவாகியிருக்கிறதா என்று ஆராய்ந்தனர். அப்படி எந்த புகாரும் பதிவாகவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அத்துடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைபற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, சம்பவத்தன்று, சந்தேகப்படும்படி இனோவா கார் ஒன்று அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது பதிவாகியிருந்தது. பாழடைந்த குளம் இருந்த மட்டுமல்லாமல், அந்த பகுதியிலுள்ள எல்லா சிசிடிவி காட்சிகளிலும் இந்த கார் பதிவாகியிருந்தது. இந்தை மிகப்பெரிய க்ளூவாக வைத்து அந்த காரின் பதிவெண்ணை வைத்து தனிப்படையினர் விசாரிக்கத் தொடங்கினர்.

இனோவா கார் யாருடையது என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தியதில், அந்த கார் விருதுநகர்‌ மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தங்க திருப்பதி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, சிவகாசி விரைந்த தனிப்படையினர், தங்க திருப்பதியைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடைய நண்பர் கில்பர்ட் ஜான்‌ என்பவர் காரை கடந்த 2 நாட்களாக பயன்படுத்தி வருவதாக சொல்லி உள்ளார்.. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை கில்பர்ட் ஜானை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஜான் கில்பர்ட் ஒரு பெயிண்ட்டர் என்பதும் அதே பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வந்த கமலி என்ற பெண்ணைக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கமலி ஜான் கில்பர்ட் தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. மேலும் ஜான் கில்பர்ட்டின் காதல் மனைவி கமலிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து, ஜான் கில்பர்ட் தனது மனைவி கமலியை கண்டிக்க தொடங்க இந்த தம்பதிக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும், கணவன்-மனைவிக்கு சண்டை வந்துள்ளது.. இதனால், கோபமடைந்த கமலி, கீழே கிடந்த பிளாஸ்டிக் பைப்பால், ஜான் கில்பர்ட்டை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான் கில்பர்ட், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி கமலியின் தலையிலேயே அடித்துள்ளார்‌. இதில் கமலி ரத்த வெள்ளத்திலேயே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதற்கு பிறகுதான், மனைவின் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடைய நண்பரான தங்க திருப்பதியிடம், அவசரத்துக்கு கார் வேண்டும் என்று வாங்கிக்கொண்டு, காரின் பின்புறத்தில் கமலியின் சடலத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார். மனைவியின் சடலத்தை எங்கே போடுவது என்று தெரியாமல், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தென்காசி வந்துள்ளார். மனைவியின் சடலத்தை தூக்கி எறிவதற்கான இடம் எதுவுமே கிடைக்கவில்லையாம்.

அதனால், காரிலேயே மனைவியின் சடலத்துடன் 2 நாள் இப்படியே குற்றாலம், தென்காசி, ஆயக்குடி, செங்கோட்டை என்று காரில் சுற்றி சுற்றி ஜான் கில்பர்ட் வந்திருக்கிறார். இறுதியாக இலத்தூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தை பார்த்தவுடனே, அங்கு வைத்து கமலியின் உடலை எரித்துள்ளார்‌. கமலியின் சடலம் முழுவதுமாக எரிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு, ஜான் கில்பர்ட் கிளம்பிவிட்டார். ஆனால், அந்த சடலம் முழுமையாக எரியாமல் இருந்து, அந்த பகுதி மக்களின் கண்ணில் பட்டுள்ளது. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ஜான் கில்பர்ட்டை கைது செய்தனர்.