ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி ரூ.25 லட்சம் பறிப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் புலியனேரி பகுதியை சேர்ந்த சரவணன் ஒரு ஆட்டு வியாபாரி. இவர் வடமாநிலங்களில் ஆடுகளை மொத்தமாக வாங்கி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வாரச்சந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளில் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் ஆடுகளை விற்பனை செய்த வகையில் 13 பேரிடம் ரூ.25 லட்சத்தை வசூல் செய்தார்.

பின்னர், அங்கிருந்து பேருந்து மூலம் ஓசூர் அருகே பத்தலப்பள்ளிக்கு வந்து, அங்கு ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் சரவணனிடம் காவல்துறை எனக்கூறி கஞ்சா விற்பனை செய்கிறாயா? உன்னை விசாரிக்க வேண்டும்? என மிரட்டி கடத்தி சென்றனர். பின்னர் அந்த நபர்கள் சரவணன் பையில் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை பறித்து கொண்டு உத்தனப்பள்ளி அருகேயுள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

அப்போதுதான், தன்னை காவல்துறை அழைத்து செல்லவில்லை, மர்ம நபர்கள் பணத்தை பறிக்க கடத்தி சென்றுள்ளனர் என தெரிய வந்தது. இந்த பணம் பறிப்பு சம்பவம் குறித்து அவர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் காவல் துறை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

உதவி – ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி காவலர் தங்கையுடன் கைது

தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் உதவி – ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது. அங்குள்ள மையத்தில் ஏராளமானோர் இந்த தேர்வினை எழுதினர். அப்போது ஒரு தேர்வறையில் இருந்த வாலிபர் ஒரு கருப்பு கலரில் வித்தியாசமான முறையில் முக கவசம் அணிந்திருந்தார்.

முக கவசம் என்பதால் கண்காணிப்பாளர்களும் விட்டு விட்டனர். சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வித்தியாசமான குரல் கேட்டது. இது அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வர்களின் அருகிலும் சென்று சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணிந்திருந்த வாலிபர் அருகில் தான் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது.

உடனே கண்காணிப்பாளர்கள் அந்த வாலிபரை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர், காதில் சிம்கார்டுன் கூடிய வாய்ஸ் மீட்டரை வைத்திருந்தார். அதன்மூலம் வெளியில் இருந்து இவருக்கு ஒருவர் பதில் சொல்ல, அதனை கேட்டு, இவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாய்ஸ் மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியது, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பச்சூரை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. இவர் கோவைப்புதூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன். காவல் உதவி – ஆய்வாளர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

அதற்காக வாய்ஸ்மீட்டரை பயன்படுத்தி எழுதலாம் என முடிவு செய்தேன். அதன்படி தேர்வு அன்று, எனது தங்கை தேர்வறைக்கு வெளியில் இருந்து பதில்களை சொல்ல சொல்ல, அதனை வாய்ஸ் மீட்டர் வழியாக கேட்டு நான் தேர்வு எழுதினேன் என தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை பயிற்சி காவலர் நவீன் மற்றும் அவருக்கு உதவிய தங்கை சித்ரலேகா ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.

மத்திய அரசின் கீழ் ரூ.7.50 லட்சம் திறக்கப்பட குடிநீர் சுத்திகரிப்பு மையம் 10 நாட்களில் பழுதால் முடங்கியது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி சிங்காரப்பேட்டை. பெங்களூரு – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிங்காரப்பேட்டையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், சிங்காரப்பேட்டை, குருகப்பட்டி, கென்னடி நகர், மேட்டுத் தெரு மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்களின் தேவைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின், திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கட்டிடத்துடன் கடந்த 2018-19-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பயன்பெற வேண்டிய நிலையில், சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட 10 நாட்களில் பழுதால் முடங்கி உள்ளது. இதனை, ஒப்பந்தம் எடுத்தவர்கள் சீரமைத்தனர். ஆனால் அடுத்த இரு நாட்களில் மீண்டும் பழுதாகிவிட்டது. ஆனால் தற்போது வரை சீரமைக்காமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூட்டியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

100 நாள் வேலை திட்ட பெண்களிடம் வேலை செய்யாமல் பணிபுரிந்ததாக கணக்கு காட்ட ரூபாய் வசூல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிய, பெண்களுக்கு அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கான பணிகளை பிரித்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் பணிதள பொறுப்பாளராக அனுமதிக்கப்பட்ட ஒரு சில நபர்கள், கிராமப்புற பெண்களிடையே பேசி, ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாக கணக்கு காட்ட வேண்டும் எனில், தினமும் தலா ரூ.100 கொடுத்தால், பணிபுரிவது போல் கணக்கு காட்டி, அதற்கான பணத்தை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பணம் கொடுத்தவர்கள் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வேலைக்கு சென்றவாறே சம்பாதிக்கலாம் எனக்கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெண்களிடம் தலா ரூ.100 வசூலிப்பதை கிராமப்புற பெண்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.