கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவிப்பு: பட்டா, குடும்ப அட்டை… உடனடி தீர்வு..!

ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும், மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அரசின் சேவைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். குறிப்பாக பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து, பயன்பெற முடியும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய 8 தாலுகாக்களில் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கலாம். அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் வருகிற 16-ந் தேதி மற்றும் 20 முதல் 23-ந் தேதி வரையிலும், 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல சூளகிரி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஓசூர் உதவி ஆட்சியர் பிரியங்கா தலைமையில் 16, 20, 21, 22, 23, 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது. போச்சம்பள்ளி தாலுகாவில் கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் ஷாஜகான் தலைமையில் 16, 20, 21, 22, 23, 27-ந் தேதிகளிலும் பர்கூர் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தனஞ்செயன் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் ஓசூர் தாலுகாவில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் நடக்கிறது. ஊத்தங்கரை தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், அஞ்செட்டி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி தலைமையில் 16, 20-ந் தேதிகளிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது” என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணன்: வனவிலங்கு சரணாலயம் அமைப்பதாக கூறி, கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொல்லை..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள சிறப்புக் குழு, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். சட்டவிரோத குவாரிகளை மூடி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசியல் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது. வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சுற்றியுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு..! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாரத்தை கணக்கில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வீடு கட்டும் திட்டத்தை செயல்முறை படுத்தி வருகின்றது. ஆனால் எதிலும் ஊழல் செய்வதில் கரைதேர்ந்த ஊழல்வாதிகள் இந்த துறையும் விட்டு வைக்கவில்லை. ஆகையால், நட்டில் பல இடங்களில் ஊழல்வாதிகள் பிடிபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

அதன்வரிசையில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021.-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சிதறிய உடல்கள்.. கிருஷ்ணகிரி வெடிவிபத்து – வி.கே. சசிகலா ஆவேசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வீடுகள் இடிந்ததுடன், 10 க்கு அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வி.கே. சசிகலா பேசுகையில், “கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும், 10-க்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது கூடுதல் கவலையை அளிக்கிறது. தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது.

திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கணடனத்திற்குரியது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இன்றைக்கு இந்த விபத்து ஏற்பட்டு இத்தனை உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கினால், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தூக்கத்தில் இருப்பதாலும்தான் எந்த பணிகளையும் சரியாக செய்ய முடியாமல் தமிழக மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.