‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் தனியாக கூடிய “கிராம சபை கூட்டம்..!”

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் நான்கு ஊர்களும், ஒன்பது வார்டுகளும் உள்ளன. அவற்றில் பொட்டலூரணி கிராமத்தில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொட்டலூரணி கிராமத்தில் 2 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை தங்கள் ஊரில் நடத்த வேண்டும் என பொட்டலூரணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.

ஆனால், இன்று எல்லைநாயக்கன்கட்டி ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம் செட்டிமல்லன்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொட்டலூரணி கிராம மக்கள் ஒன்று திரண்டு ‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் தனியாக கிராம சபை கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஜெயலெட்சுமி, 4-வது வார்டு உறுப்பினர் சுபா, 5-வது வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி, 6-வது வார்டு உறுப்பினர் சத்தியா நாராயணலட்சுமி, 7-வது வார்டு உறுப்பினர் பூமாரியம்மா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தனியார் மீன்கழிவு ஆலைகளுக்கு எதிரான போராட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பொட்டலூரணி கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொட்டலூரணி கிராம மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். மக்களவை தேர்தலின் போது பொட்டலூரணி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி செலாளரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பொட்டலூரணியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்புமணி ராமதாஸ்: சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது..! மக்களுக்கு சுதந்திரம் இல்லை…!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார். இந்நிலையில், திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் காசிநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பிரம்மதேசத்தில் செயல்படும் மதுக்கடையை மூடுவதற்கும், மரக்காணம் தாலுக்காவுடன் இணைக்கப்பட்டுள்ளதை திண்டிவனம் தாலுக்காவுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள், கல்லீரல் பிரச்சினை, தற்கொலை நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆட்சிக்கு வரும் முன் ஆட்சியாளர்கள் நிறைய வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதனையும் கண்டு கொள்வதில்லை.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது. ஆனால் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரமாகும். சொந்த கிராமத்துக்கு வந்து கிராம சபையில் பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறைகள் மதுவினால் அடிமையாகியுள்ளது. கஞ்சா – போதைப் பொருட்களை கட்டுபடுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன். மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுபடுத்த நடவடிக்கை இல்லை.

தயவுசெய்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும் போது, இவருக்கு இல்லை என பொய் கூறி கொண்டுள்ளார். மதுக்கடைகளை மூடுவதற்கு ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும். தேர்தல் அரசியலை மட்டும் பார்க்க கூடாது.

ஏற்கெனவே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 1998-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பாமகதான். திமுக 1999-ம் ஆண்டுதான் பட்டியலின சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. ஆகையால் தமிழகத்தில் பட்டியலின சமூதாயம் பாமகவுக்கு ஆதரவு கொடுத்தால் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக ஆக்குவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

காவல்துறை பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடை பெறவில்லை. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கிராம சபைக் கூட்டத்துக்கு வரவில்லை. அதனால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தலைவர் இல்லாமல் கிராம சபை நடத்தக் கூடாது என கூறி கிராம சபைக்கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

அப்போது அதிகாரிகள் வேறொரு நாளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறை பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் அலங்கியம் சாலை திரு.வி.க நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கவுண்டச்சிபுதூர்…! கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் வராததால் மீண்டும் பரபரப்பு…!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நேற்று காலை 11 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் வரதா காரணத்தால் ஊராட்சி செயலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த முன் வந்தனர். ஆனால் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா என பொதுமக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதாக தெரிகிறது. பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பதாக கூறி கடந்த மே 1-ந்தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ஊராட்சி தலைவர் பங்கேற்க வில்லை, அதேபோன்று நேற்றும் புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் ஊராட்சி பகுதியில் கடந்த 4 வருடங்களாக சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, துப்புரவுப்பணி, தார் சாலை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாகவும், பிரச்சினைகளை மனு மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றால் முறையான பதில் எதுவும் தராமல் சத்தம் போட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே தலைவர் செல்வி கிராம சபை கூட்டத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஒத்தி வைப்பு அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.