பொன்னேரி பாலாஜி நகர், 7வது வார்டு, பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த மாற்றுத் திறனாளி அன்பு பரணி நாகவேல். அரசு முத்திரையிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் பெரிய அரசு அதிகாரி போல் வலம் வந்ததால், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டவர் சுப்பன் என்பவர் தனக்கு அரசுப்பணி வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அன்புவிடம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார்.
பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உதவி ஆணையர் பதவிக்கான ஆணை மற்றும் போலியாக தயார் செய்த அடையாள அட்டையையும் ஆண்டவர் சுப்பனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அன்பு, கொடுத்துள்ளார். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை அடையாள அட்டை மாற்றுவது வழக்கமாக இருந்த நிலையில் ஆண்டவர் சுப்பனுக்கு நாள் 1.5.2023 என்று குறிப்பிட்ட அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு, முடிவடையும் நாளான 1.5.2024ம் குறிப்பிடாமல் இருந்ததால் ஆண்டவர் சுப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இது போலி என்ற சொல்லி ஆண்டவர் சுப்பன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்காக அன்பு, ஆண்டவர் சுப்பனுக்கு ரூ.2 லட்சம் திருப்பி கொடுத்துள்ளார்.
மீதியை பிறகு தருகிறேன் எனக்கூறியுள்ளர். ஆனால் கடந்த 2 மாதமாக பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டவர் சுப்பன் உட்பட 6 பேர் நேற்று அன்பு வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பிக் கேட்டனர். அப்போது, அன்பு பரணி நாகவேலுடன் இருந்த பெண் ஒருவர் ஆண்டவர் சுப்பனை தாக்கி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. மேலும் அன்பிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தகவலறிந்த பொன்னேரி காவல் ஆய்வாளர் சின்னதுரை நேரில் வந்தார்.
விசாரணையில் ஆண்டவர் சுப்பனுடன் வந்த மீஞ்சூர் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.1 லட்சம், பாரதி என்ற பெண்ணிடம் ரூ.50,000, ரத்னா என்ற பெண்ணிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், மோகன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் என பலரிடம் இருந்தும் சுமார் ரூ.6 லட்சம் வரை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, 3 மாதத்திற்கு ஒரு முறை இடத்தை மாற்றி வசித்து வந்துள்ளார். இது குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அன்புவை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.