காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போட்டு 1.50 லட்சம் ஆட்டைய போட முயன்ற 2 காவலர்கள் பணியிடை நீக்கம்..!

காவல் ஆய்வாளரின் முத்திரையை பயன்படுத்தி, அவரை போல் போலி கையெழுத்து போட்ட 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மங்களபிரியா என்ற பெண் ஆய்வாளர் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, கடந்த 2 மாதங்களுக்கு முன் கடப்பாக்கம் அருகே சேம்புலிபுரம் பகுதியில் குருசாமி என்பவரை கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததாக மதுவிலக்கு காவல்துறை கைது செய்து, அவரது வங்கி கணக்கையும் முடக்கியது.

இதற்கிடையே மதுவிலக்கு காவல்துறையால் கைது செய்யப்பட்ட குருசாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வங்கி கணக்கில் சுமார் ரூ.6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு காவல் ஆய்வாளரிடம் குருசாமி விசாரித்தார். அதற்கு அவர், முறையாக நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

இந்நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது கூவத்தூர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ள தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரிடம் இப்பிரச்னை குறித்து சாராய வியாபாரி குருசாமி ஆலோசனை கேட்டுள்ளார்.

ரூ.1.50 லட்சம் கொடுத்தால் குருசாமியின் வங்கி கணக்கை மீண்டும் இயக்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பேரம் பேசியுள்ளனர். இந்த பேரதிற்கு சாராய வியாபாரி ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தலைமைக் காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய இருவரும், மதுராந்தகம் காவல் ஆய்வாளரின் அலுவலக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி, ஒரு போலி பத்திரம் எழுதி, அதில் காவல் ஆய்வாளர் மங்களபிரியாவின் கையெழுத்தை போலியாக போட்டு, சாராய வியாபாரியிடம் கொடுத்துள்ளனர்.

இக்கடிதத்தை பெற்றுக் கொண்ட சாராய வியாபாரி, கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி மேலாளரிடம் வழங்கியுள்ளார். அக்கடிதத்தை ஆய்வு செய்த வங்கி மேலாளர், சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார். அதற்கு, நான் எந்தவொரு கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என்று பெண் காவல் ஆய்வாளர் மங்களபிரியா கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் முழு விசாரணை நடத்தியபோது, இக்கடிதத்தை போலியாக தயாரித்து தலைமைக் காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

38 பவுன் நகையை ஆட்டைய போட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது.!

பரமக்குடியில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் கீதா, கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றலானார். இவர் கணவரும் மதுரை மாவட்டத்தில் மற்றொரு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ்-அபிநயாவுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அது குறித்த குடும்ப வழக்கின் விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது.

தன்னுடைய 95 பவுன் நகைகளை கணவர் ராஜேஷிடமிருந்து வாங்கித் தரும்படி காவல் ஆய்வாளர் கீதாவிடம் அபிநயா தெரிவிக்க, உடனே ராஜேஷ் காவல் ஆய்வாளரிடம் நகைகளை ஒப்படைத்துள்ளார். ஆனால், அபிநயா நகையை கேட்கும்போதெல்லாம் ராஜேஷ் இன்னும் நகையைத் தரவில்லை என்றே சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியான ராஜேஷ், அப்போதே நகைகளை காவல் ஆய்வாளரிடம் கொடுத்து விட்டதாக அபிநயா குடும்பத்தினரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த இரண்டு தரப்பினரும் காவல் ஆய்வாளர் கீதாவிடம் நகைகள் குறித்து கேட்க, அலட்சியமாகவும், அதட்டலாகவும் பதில் அளித்திருக்கிறார்.

கடந்த மே மாதம் திருமங்கலம் உதவிக் காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேஷ் புகார் செய்ய, விசாரணை நடத்தி நகைகளை உடனே ஒப்படைக்கும்படி எச்சரிக்கை செய்தும் 95 பவுனில் 20 பவுன் நகையை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேஷ் புகார் செய்ய காவல் ஆய்வாளர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்பும் ஒருசில நகைகளை மட்டும் திருப்பி அளித்தவர், 32 பவுன் நகைகளை ஒப்படைக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் கீதா மீது உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் மோசடி செய்திருப்பது உறுதியானதால் காவல்துறைத் துணைத் தலைவர் உத்தரவில் திருமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம்: காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் கிரிஷ் பால் பண்ணை மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்படும் என ஆசைவார்த்தை கூறி வணிகர்கள், தொழிலதிபர்கள் , பொதுமக்கள் எனப் பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னதுபோலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்விளைவு சொந்த ஹெலிகாப்டரில் வலம் வரும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைந்து, ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டும் அளவிற்கு மாறினார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸின், சாயம் போகப்போக வெளுக்க ஆரம்பித்தது, கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியினர் மற்றும் கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் 15 கோடி மோசடி ரூபாய் செய்துவிட்டதாக, கடந்த 2021-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ், சுவாமிநாதன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், கணேஷ் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், கணேஷ் அங்கு தனியார் லாடஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது, பூதலுார் ஆய்வாளராக இருந்த கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு ஏப்.17 ம் தேதி, லாட்ஜ்க்கு சென்று கணேஷிடம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரகு பிராசத் மற்றும் சீனிவாசன் என்பவர்களுக்கு 2 கோடியே 38 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிறகு மறுநாள் அப்போது சிறப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த சோமசுந்தரம், கண்ணன் இருவரும் மீண்டும், கணேஷை லாட்ஜில் சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலும் மோசடி வழக்கில் விசாரணை நடத்தாமல் இருக்கவும் 6 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அத்துடன் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை தர கோரியுள்ளனர்.

கணேஷிடமிருந்து ஏப்.19-ம் தேதி 5 லட்சமும், 29-ம் தேதி 5 லட்சமும் பணத்தை சோமசுந்தரமும், கண்ணன் இருவரும் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரணையில் தெரியவர, லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயிலாடுதுறை சிறப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.