சென்னையில் மசாஜ் சென்டரில் பணிபுரியும் இளம் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த காவலர் ஒருவர் அவரிடம் சுமார் 65 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டதோடு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். இளம் பெண் அளித்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைதாகி இருக்கும் சம்பவம் தமிழக மகளிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பல மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. அதில் பல முறையான அனுமதி பெற்ற மசாஜ் சென்டர்களும் இயங்கி வருகிறது. இந்நிலையில், மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து சென்னை காவல்துறை அதிரடி சோதனை நடத்தியதில் பாலியல் தொழில் ஈடுபட்ட சில பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மசாஜ் சென்டரில் வேலை பார்த்த பெண்ணை விபச்சார வழக்கில் கைது செய்வேன் என பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தென் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளது.
தென் சென்னையை சேர்ந்த பிரியா என்ற இளம் பெண் அப்பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் ஷாப்பிங் சென்று விட்டு வீடு திரும்பி இருக்கிறார். அப்போது பிரியாவின் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய காக்கி நிற பேன்ட் அணிந்த ஒருவர் தான் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை என கூறி இருக்கிறார். மேலும் நீ ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்வது எனக்கு தெரியும். உன்னை பற்றிய அனைத்து டீடெய்ல்களும் என்னிடம் இருக்கிறது. தற்போது உன்னை கைது செய்ய வந்திருக்கிறேன் என மிரட்டி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா தான் என்ன செய்ய வேண்டும் என கேட்டு இருக்கிறார். தொடர்ந்து காக்கி பேன்ட் அணிந்திருந்த அந்த நபர் உன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதனை கேட்டு பயந்து போன பிரியா வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் எடுத்து கொடுத்து இருக்கிறார். மேலும் மீதமுள்ள பணத்தை ATM மில் எடுத்து வருவதற்காக தனது கணவரை அனுப்பி உள்ளார்.
இதை அடுத்து பிரியாவின் கணவர் வீட்டில் இருந்து சென்ற நிலையில், காக்கி நிற பேண்ட் அணிந்த காவலர் வீட்டில் அமர்ந்து இருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணத்தை எடுத்து வந்த அந்த பெண்ணின் கணவர் 15,000 ரூபாயை அந்த காவலரிடம் கொடுக்க அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில் கணவர் வெளியே சென்றதும் தனக்கு நடந்த கொடுமை குறித்து அழுது புலம்பி இருக்கிறார். இதை அடுத்து அந்த பெண்ணை அழைத்துக் கணவன் விருகம்பாக்கம் அனைத்து நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த காவலரின் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காக்கி பேண்ட் அணிந்து வந்தது ஏற்கனவே மோசடி புகார் ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சென்னையில் ஆயுத படையில் காவலராக பணியாற்றும் பாபு ஷா என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பாபு ஷாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.