சீமான் கேள்வி: கார் பந்தயம் நடத்த மட்டும் அரசிடம் பணம் இருக்கா..!?

“ரூ.250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடாக இல்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

பள்ளிக்கல்வித் துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1-ம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150-ன் படி, தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997-ம் ஆண்டு அரசாணை 525-ன் படி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250-க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்? அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழக அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

ரூ.250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழகத்தில் விளையாட்டுத் துறையை உலகத் தரத்துக்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது. அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும்.

அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Formula 4: சவுரவ் கங்குலியின் பெங்கால் டைகர்ஸ் 2- வது இடம் பிடித்து அசத்தல்

தெற்கு ஆசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன்தினம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது. இந்த பந்தயத்தின் பயிற்சியை நேற்று முன்தினம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பந்தயத்தின் கடைசி நாளான நேற்று பிரதான சுற்று நடைபெற்றது. இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் இரு பந்தயமாக நடத்தப்பட்டது. இதில் பந்தயம் 1-ல் 16 டிரைவர்கள் இடம் பெற்றிருந்தனர். நேற்று நடைபெற்ற பந்தயத்தின்போது மின்விளக்குகளால் ஜொலித்த பந்தயம் தொடங்கியதும் கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 240 கிலோ மீட்டருக்கு மேல் பறந்த கார்களை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

பந்தயம் 1-ல் காட்ஸ்பீடு கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் பந்தய தூரத்தை 19:50.952 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெங்கால் டைகர்ஸ் அணியின் ரூஹான் பந்தய தூரத்தை 19:50.251 விநாடிகளில் கடந்த 2-வது இடத்தையும், பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ் அணியின் அபய் மோகன் 20:09.021 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். சென்னை டர்போ ரைடர்ஸ் அணியை சேர்ந்த இஷாக் டிமெல்வீக் 20:11.408 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்த பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பந்தயங்களை அணியின் உரிமையாளர்களான சவுரவ் கங்குலி, நாகசைதன்யா, அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Formula 4: நாக சைதன்யா, திரிஷா கண்டுகளிக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது..!

தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், ஃபார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.

நேற்று பயிற்சி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா என திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளிக்கின்றனர்.

Formula 4: தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்..!

தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய ஓட்டுனர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். தகுதி சுற்றின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான பந்தயத்தில் ஓட்டுனர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதி சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நாளை பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டை கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும். பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.

அதேவேளையில் இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கும், 2-வது போட்டி இரவு 10.05 மணிக்கும் தொடங்கும். இந்த 2 பந்தயங்களும் தலா 30 நிமிடங்களைக் கொண்டது. இரவு 10.35 மணியுடன் போட்டிகள் முடிவடையும். இது தவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டியும் நடத்தப்படுகிறது. பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. பார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.

சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

போட்டியில் பங்கேற்கும் கார்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பந்தயத்தையொட்டி தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியா்பாலம் என போட்டி நடைபெறவுள்ளசாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பார்வையாளர்கள் போட்டிகளை பாா்த்து ரசிக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.