வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது… மேலும் ஒருவர் தலைமறைவு.!

சென்னை, அம்பத்தூர், பச்சையப்பன் பிரதான சாலையைச் சேர்ந்த சத்ய நாராயணன், அவரது மனைவி ஷாலினி, மாதவரம் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமஸ் ஆகியோருக்கு திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தைச் சேர்ந்த காயத்ரி அறிமுகமாகியுள்ளளார். சத்ய நாராயணன், தனக்கு பல அரசியல் கட்சியினர் தெரியும், அவர்கள் மூலமாக, கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக காயத்ரியிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்விளைவாக, காயத்ரி உள்ளிட்ட 8 பேரிடம் சத்ய நாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.74 லட்சம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆனால் சத்ய நாராயணன் சொன்னதுபோல வேலை வாங்கித் தரவில்லை. ஆகையால் காயத்ரி உள்ளிட்ட மற்ற 8 பேரும் சத்ய நாராயணன் பணத்தை திருப்ப கேட்டுள்ளனர். இந்நிலையில், காயத்ரி அம்பத்தூரில் உள்ள சத்யநாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் மூவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2021-ல் காயத்திரி மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். இதை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஷாலினி மற்றும் தாமஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் சத்ய நாராயணனை தீவிரமாக தேடுகின்றனர்.

உயர் நீதிமன்றம் உத்தரவு: மூத்தோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்; ‘எனக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவரும், அவரது தந்தை அம்பிகாபதியும் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தனர். அதை மறைத்து எனக்கு எதிராக மாமானாரும், மாமியாரும் சேர்ந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலரிடம் அதாவது மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர், என்னை வீட்டை விட்டு காவல் துறை உதவியுடன் வெளியேற்றி, வீட்டை மாமனார். மாமியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ன் படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. எனவே, இந்தச் சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. ஆகையால், மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார்.