ஸ்ரீ சிவபிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் எனும் இந்துத்துவ அமைப்பின் நிறுவனர் சாம்பாஜி பிடே என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். ஒருமுறை பெண் நிருபர் ஒருவர் இவரிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், அந்த பெண் நிருபரை பார்த்து, “நீங்கள் பொட்டு வைக்கவில்லை. எனவே நான் உங்களுக்கு பேட்டியளிக்க போவதில்லை. நீங்கள் அடுத்த முறை வரும்போது மறக்காமல் பொட்டு வைத்து வாருங்கள்” என்று கூறி சலசலப்பை ஏற்படுத்திய சாம்பாஜி பிடேவின் கருத்துக்கள் கடந்த காலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல காந்தியின் குடும்பத்தை வேறு ஒரு மதத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று மற்றொரு கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது “இந்துக்கள் சாய்பாபாவை வணங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், அவருடைய கோயிலுக்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். அவர் இந்து கடவுள் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்துக்கள் அவரை மதிக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர் அதற்கு தகுதியானவரா என்பதை இந்துக்கள் சரிபார்க்க வேண்டும்.இந்துக்கள் முதலில் தங்கள் வீடுகளில் இருந்து சாய்பாபாவின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை அகற்றி எறிய வேண்டும். சாய்பாபாவை கடவுளாக கருத கூடாது” என்று கூறி மீண்டும் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.