காரைக்கால் கடற்கரைக்கு வந்த காதல் ஜோடியை மிரட்டி ஆன்லைன் மூலம் காவலர் ஒருவர் ரூ.3 ஆயிரம் வாங்கிய வீடியோ வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் காண்போரை முகம் சுளிக்க வைக்கும். அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருக்கும் நேரங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில், காரைக்கால் கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பகல் நேரத்தில் அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருக்கும் நேரங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதை பயன்படுத்தி காரைக்கால் கடலோர காவல் படையில் பணிபுரியும் காவலர் ராஜ்குமார், காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரைக்கு ஒரு காதல் ஜோடி வந்தது. அந்த காதல் ஜோடியை புறநகர் காவல் நிலையத்துக்கு காவலர் ராஜ்குமார் வரவழைத்தார். இதையடுத்து காதல் ஜோடியை மிரட்டி ரூ.3000 ஜிபேயில் வாங்கினார். மேலும் அந்த பெண்ணை மிரட்டி தாலி இருக்குதா என்று கழுத்தில் கை வைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து எப்படி பணம் வாங்குவீர்கள்? அந்த பெண்ணை ஏன் மிரட்டினீர்கள்?, அவரை தனிமையில் எதற்காக வர சொன்னீர்கள்…? என்று கேட்டதுடன், இதை வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
காவலர் ராஜ்குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை தொலைபேசியில் தொடர்ந்து பேசி, உல்லாசத்துக்கு அழைத்து டார்ச்சர் கொடுத்தார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதைய வீடியோ வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.