காதலி கொலை.. மறுநாள் அதே இடத்தில் வேறு பெண்ணுடன் உல்லாசம்.. காட்டி கொடுத்த ஆறாவது விரல்..!

பெற்றோர் இல்லாத பெண்ணை காதலித்து, திருமணத்திற்கு நெருக்கடி கொடுத்த காரணத்தால் கொலை செய்து அதே இடத்தில் மறுநாள் வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே அமைதிசோலை பகுதியில் கடந்த 13-ஆம் தேதி, எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக கன்னிவாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறை உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உடலின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்த நிலையில் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இடது கை மட்டும் எரியாமல் இருந்தது. அந்தப் பெண்ணுக்கு இடது கையில் 6 விரல்கள் இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர், சமூக வலைதளங்களில் அதுகுறித்து தகவல் பரப்பினர்.

அதை பார்த்த திண்டுக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தோழி மாரியம்மாளுக்கு 6 விரல்கள் இருப்பதும், அவர் காணாமல் போனது தொடர்பாக அந்த பெண்ணின் காதலன் பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்து அன்று உன்னுடன் தானே மாரியம்மாள் வந்தாள் எனவும் கேள்வி கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட பிரவீன், கன்னிவாடி காவல் நிலையம் சென்று தனது காதலியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை வாங்கிக்கொண்ட காவல்துறையினர், பிரவீனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரவீனிடம் விசாரணையை மேற்கொண்டனர். பிரவீனிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மாரியம்மாள் பெற்றோர் இல்லாத நிலையில் மதுரையில் ஆசிரமத்தில் வளர்ந்து வந்துள்ளார். அங்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் அறிமுகமான பிரவீனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக ஜோடியாக உலாவி வந்ததால், தன்னை திருமணம் செய்யும் படி மாரியம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு பிரவீன் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்து அன்று மாரியம்மாளிடம் நைசாக பேசி, அமைதிசோலை பகுதிக்கு பிரவீன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து அப்பாவி பெண்ணை கொலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். காதலியை கொலை செய்த குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் மறுநாளே மற்றொரு பெண்ணை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பிரவீன் உல்லாசமாக இருந்துள்ளார்.

தொடர்ந்து அமைதிசோலைக்கு தனியாக சென்ற பிரவீன், அங்கு சடலமாக கிடந்த மாரியம்மாள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, பிரவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தந்தையின் சடலத்தை அடக்கம் செய்யும் முன்பு காதலியை திருமணம் செய்த மகன்..!

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற பாடல் வரிகளை பலர் கேட்டிருப்போம். தந்தையை இழந்த மகன் அவர் உடலை அடக்கம் செய்யும் முன்பு செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ். இவரது மகன் அப்பு என்பவர் பட்டப்படிப்பு படித்துள்ள நிலையில் இவர் கல்லூரியில் படித்து வரும் விஜயசாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனால் அப்பு நொறுங்கி போனார். எனினும் தனது தந்தையின் ஆசியுடன் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பிய அப்பு, காதலி விஜயசாந்திக்கு, அப்பாவின் முன்பு திருமணம் செய்தார். இந்த சம்பவத்தை முழுமையாக விரிவாக பார்ப்போம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ். அவருடைய மகன் அப்பு பி.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். விருத்தாசலம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் அரசக்குழி கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி என்பவரை அப்பு காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலாமானார். பின்னர் உறவினர்கள் செல்வராஜின் உடலை அவரது வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அப்பு எனது தந்தையின் ஆசியுடன் தான் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று கூறி கதறி அழுதார். உடன் உறவினர்கள் அவரை ஆறுதல் கூறி, உடனே திருமணம் செய்வோம் என கூறி இருக்கிறார்கள்.

இதையடுத்து அப்பு, தனது காதலி விஜயசாந்தியை நேரில் அழைத்தார். அவருடம் அப்புவின் வீட்டிற்கு வந்தார். அங்கு செல்வராஜியின் உடலை நாற்காலியில் அமர வைத்தனர். அருகில் அவரது மனைவி கண்ணம்மாள் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார். அப்போது உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்து நிற்க தனது தாய், தந்தை இருவருக்கும் பாத பூஜை உள்ளிட்ட திருமண சடங்குகளை அப்பு செய்தார். தனது தந்தையின் கையில் தொட்டு வாங்கிய தாலியை காதலி விஜயசாந்தியின் கழுத்தில் கட்டி அவரை திருமணம் செய்தார்.

பின்னர் தாய், தந்தை இருவரின் காலில் விழுந்து அவர்கள் ஆசி பெற்றனர். அங்கு நின்ற உறவினர்கள், நண்பர்களும் கண்ணீர் மல்க அப்பு, விஜயசாந்தி தம்பதியை வாழ்த்தினர். இந்த சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காதலியை கரம்பிடிக்க போதையில் 5 முறை கிணற்றில் குதித்து ஆசாமி..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரை சேர்ந்த முனியப்பன் மகன் விஜய். கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டி பகுதியை சேர்ந்த திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவி. அந்த மாணவிக்கும், விஜய்க்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவியின் வீட்டிற்கு போதையில் நேற்று முன்தினம் சென்ற விஜய், திருமணம் செய்து கொள்ளலாம் வா எனக்கூறி மாணவியை அழைக்க, மாணவி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவியிடம் நீ வராவிட்டால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வேன் எனக்கூறிவிட்டு, பாலப்பட்டி அருகே விவசாய கிணற்றில் விஜய் குதித்துள்ளார். அவருக்கு நீந்த தெரியும் என்பதால் மேலே எழுந்து வந்தவர் மீண்டும் குதித்தார். இப்படியாக 4 முறை குதித்து மேலே எழுந்து வந்தவர் 5-வது முறையாக குதித்தபோது மேலே வர முடியவில்லை.

விஜய் கிணற்றில் குதித்தது, மாணவியின் உறவினர்கள், கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறை இடைப்பாடி தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி விஜய்யை உயிருடன் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என விஜய்யை காவல்துறை எச்சரித்து அனுப்பினர். அப்போது, மாணவி காவல்துறையினரிடம் தான் விஜய்யுடன் செல்வதாக கூற அவரது உறவினர்கள் மாணவிக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.