லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஊராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு 28 பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஆணை வழங்கப்பட்டது. இதில் 23 வீடுகள் அப்போது கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என கூறி அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வீடு கட்டிய பயனாளிகளுக்கு அதற்குரிய பணம் வழங்காமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நிறுத்தி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீடு கட்டிய பயனாளிகள் தங்களுக்கு உரிய பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், 23 பயனாளிகளுக்கு வீடு கட்டியதற்கான பில் போட்டு பணம் வழங்க ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் அனைவரும் சேர்ந்து அந்த அதிகாரியிடம் ரூ. 2 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வாங்கிக்கொண்டு அவர், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பயனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயனாளிகள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அந்த அதிகாரி வருகிற 31-தேதி பணி ஓய்வு பெற இருப்பதால் பயனாளிகளுக்கு பில் தயார் செய்து கொடுக்காவிட்டால் நமக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடும் என கருதினார். இதையடுத்து அவர், தான் வாங்கிய ரூ.2 லட்சம் பணத்தை சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கி விட்டு பின்னர் அதனை திருப்பி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 திருநங்கைகளுக்கு 100 ஆடுகள் ஆட்சியர் வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனை மருந்தக வளாகத்தில் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் 2017-2018-ம் ஆண்டின் கீழ் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, கால்நடை பராமரிப்பு துறை மூலம் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு, ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 800 மதிப்பில், 10 திருநங்கைகளுக்கு தலா 10 ஆடுகள் வீதம் மொத்தம் 100 ஆடுகளை வழங்கினார்.