ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின்வாரிய அலுவலர் கைது..!

பணி ஓய்வு பெறும் மின் பொறியாளரிடம் ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து பல அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதேநேரம் அரசு ஊழியர்களே சக அரசு ஊழியர்களே லஞ்சம் கேட்கும் பிரச்சனையில் சிக்குவதும் உண்டு.

இதிலும், குறிப்பாக ஓய்வு பெற போகும் அரசு ஊழியர்கள் பண பலனை பெற லஞ்சம் தர வேண்டிய நிலை ஆங்காங்கே அரங்கேறுகின்றது. இப்படித்தான் ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். வருகிற 30-ந்தேதியுடன் ராஜேந்திரன் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி ஓய்வுக்கால பணப்பலன்கள் கேட்டு அவர் கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக பணியாற்றும், கள்ளக்குறிச்சி அஜிஸ்நகரை சேர்ந்த 50 வயதாகும் செந்தில்குமார் என்பவர், பணப்பலன்கள் தொடர்பான கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இதுகுறித்து கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்தார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறைக அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை ராஜேந்திரன் எடுத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்த செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய அலுவலர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர் எம்பி சீட் தருவதாக கூறி ரூ.1.60 கோடி சுருடியதாக வழக்கறிஞர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன். இவர் மனைவி மற்றும் நண்பர்களுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், அதிமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறேன்.

அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது போடப்பட்ட 9 வழக்குகள் மற்றும் 2022-ல் உளுந்தூர்பேட்டையில் அமையவுள்ள திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் கட்டப்பட்டு வரும் வெங்கடேசபெருமாள் கோயில் வழக்குவரை அனைத்து வழக்கிலும் ஆஜராகி பணம் வாங்காமல் வழக்கை முடித்து கொடுத்தேன்.

இந்நிலையில், கடந்த 22.1.2024-ஆம் தேதி மாவட்ட செயலாளர் குமரகுரு 2024 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தனி தொகுதிக்கு உன்னை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு பரிந்துரைத்து சீட் வாங்கி தருகிறேன் என்றும், அதற்கு ரூ.2 கோடி தயார் செய்யும் படியும் தெரிவித்தார். அதன்படி 3 தவணையாக மொத்தம் ரூ.1.60 கோடி கொடுத்தேன். விழுப்புரம் எம்பி சீட் உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள ரூ.40 லட்சம் கொடுக்கிறேன் என தெரிவித்து இருந்தேன்.

மார்ச் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லாமல் வேறு நபர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் குமரகுரு திட்டமிட்டு நம்பவைத்து ஏமாற்றியது தெரியவந்தது. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதற்கு என்னை தாக்கினார். எனது ரூ.1.60 கோடி பணத்தை பெற்று தர வேண்டும். என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டால் குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் நமச்சிவாயமும் தான் பொறுப்பாவார்கள் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு ஆணா, பெண்ணா என பரிசோதனை நடத்தி போலி மருத்துவர் கைது

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி மேற்கு காட்டுக் கொட்டாய் முயல்குன்று பகுதியைச் சேர்ந்த பார்மஸி டிப்ளமோ படித்து முருகேசன். இவர் கர்ப்பிணிகளுக்கு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வருவதாக பாலின தேர்வை தடை செய்தல் சட்ட மாநில அளவிலான கண் காணிப்பு குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இக்கண்காணிப்பு குழு துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராமு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் நிர்வாக அலுவலர் கமலக் கண்ணன், சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முருகேசன் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு கர்ப் பிணிகளுக்கு, ஆணா, பெண்ணா என பரிசோதனை நடத்தி அவர்களுக்கு கருக் கலைப்பு செய்ய இருந்ததும் தெரிய வந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அந்த கர்ப்பிணிகள் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தியத்தில் அங்கு கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

அங்கிருந்து கர்ப்பிணிகளுக்கு ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் ஸ்கேனிங் மெஷின், கருக் கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள், கையுறை, ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அனுமதியில்லாமல் இயங்கி வந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கருக்கலைப்பு மையத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காணாமல் போன ரூ.9 லட்சம் மதிப்பு பயணச்சீட்டுகள் பயணிகளுக்கு வழங்கல்

கடந்த மாதம் 7-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து சென்றது. நடத்துனர் இல்லாத இந்த பேருந்தில், கண்டாச்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தமிழரசு என்ற நடத்துனர், பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார். காலை 6.45 மணியளவில் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்த பேருந்தை வேலூர் மண்டல பயணச்சீட்டு பரிசோதகர் ஜெயவேல் தலைமையிலான குழுவினர் நிறுத்தி பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பயணச்சீட்டுகள் 2021-2022-ல் கொரோனா காலத்தில் காணாமல் போன டிக்கெட்கள் என தெரியவந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் முருகன், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் காணாமல் போன, ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 மதிப்பிலான பயணச்சீட்டுகளை பயணிகளிடம் தமிழரசு வழங்கியதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்நிலையில், நடத்துனர் தமிழரசு, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ஏற்கனவே காணாமல் போன பயணச்சீட்டுடை கிளை மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் 4 பேர் மூலமாக நடத்துனர்களுக்கு தெரியாமல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார், என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்கியதாக நடத்துனர் தமிழரசுவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிளை மேலாளர் உள்பட 14 பேரிடம் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தயம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில் தார் மனோஜ் முனியன் தலைமையில் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார்கள். அப்போது சில வீடுகளின் பிற பகுதிகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை கள்ளக்குறிச்சி தாசில்தாரை அரசியல் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.