மெட்ராஸ் உயர் நீதிமன்றம்: ஆறு ஏழு முறை கருக்கலைப்பு.. விஜயலட்சுமி விவகாரம் சீமான்…!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியிடம் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பிதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.

சொகுசு காரில் தொடர் கருக்கலைப்பு ..! 4 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன். இவர், தனது மனைவி சினேகாவின் பெயரில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது மனைவி பெயரில் மருந்து கடைக்கான உரிமம் அசகளத்தூரை சேர்ந்த மருந்தாளுநர் கவுதமி என்பவரது பெயரில் பெறப்பட்டு மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த மருந்துக்கடையில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தலைமை மருத்துவர் அகிலன் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு மருத்துவக்குழுவுடன் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மருந்துக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு சொந்தமான சொகுசு காரை சோதனை செய்தபோது, அதில் கர்ப்பிணியின் கருவில் வளரும் சிசு ஆணா? அல்லதுஅல்லது பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் கருவி இருந்தது. இதையடுத்து காவல்துறை மருந்துக்கடையில் இருந்த மணிவண்ணன், கவுதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகியோரை விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகளை புரோக்கர்கள் மூலம் கண்டறிந்து, அவர்களை காரில் அழைத்து வருவதுடன், ஸ்கேன் கருவி மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து மருந்துக்கடையில் வைத்து கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரையும்  காவல்துறை கைது செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் கருவி, சொகுசு கார் மற்றும் மருந்துக்கடையில் இருந்த கருக்கலைப்பு மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.