தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.
இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரதம் திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் குமரன் சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த போராட்டத்தையொட்டி ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ‘நீட்’ தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் புகைப்படங்கள் ஆகியவை வீடியோவாக திரையில் திரையிடப்பட்டது. முன்னதாக ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா படத்திற்கு அமைச்சர், எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
திருப்பூரில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் மருத்துவ கல்லூரிகளுக்கு ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏழை-எளிய, கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால் ஒன்றிய அரசு அதை சிறிதும் சிந்திக்காமல் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர். ஆண்டுதோறும் கஷ்டப்பட்டு படித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெறுகின்றனர். ஆனால் ‘நீட்’ தேர்வில் கடினமான கேள்விகளை கேட்கும்போது, தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு தேர்வு எளிதாக இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.
முன்னாள் முதல்மைச்சர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பொதுத்தேர்வுக்கு முன்பு இருந்த நுழைவுத் தேர்வையே அவர் ரத்து செய்தார். தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ‘நீட்’ தேர்வை வைத்து இந்த இடத்தை பிடித்துள்ளனர். உயர் வகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை ‘நீட்’ தேர்வு மூலமாக ஒன்றிய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணி எனவே ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க.வின் கோரிக்கை. இதில் எந்த அரசியலும் கிடையாது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன் பிறகு ‘நீட்’ தேர்வு இருக்காது என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.மேலும் காலை தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.