ரூ.4,500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..!

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற துறையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற மணிமொழி என்பவர் முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரிடம் அணுகியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமார் ரூ.6,000 ஆயிரம் லஞ்சம் கேட்க பின்னர் ரூ.4,500 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமொழி லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்புதுறை ரசாயனம் தடவிய ரூ.4,500 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சம்பத்குமாரிடம் கொடுத்து, லஞ்சம் கேட்ட அலுவலரிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதன்படி ரூ.4,500 ஆயிரத்தை சம்பத்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை சம்பத்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்…! திக்கு முக்காடிய வாகன ஓட்டிகள்..!

கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டது. இன்று அதிகாலை ரயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப் பாதையை தேடி வாகன ஓட்டிகள் திணறி வந்த நிலையில் பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ராகவேந்திரா சிட்டி சேராக்குப்பம் வழியாக வடலூர் நோக்கி சென்று வந்தது.

இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் சேராக்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேராக்குப்பம் பகுதி இளைஞர்கள் பேருந்து ஓட்டுனருக்கு உதவி செய்து பேருந்தை ரயில்வே கேட்டை கடந்து செல்ல உதவினர். பேருந்து ரயில்வே கேட்ட அருகே சிக்கிக் கொண்டதால் பண்ருட்டி வடலூர் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் மூடப்படுகிறது என்று அறிவித்தும் காவல்துறையினர் முறையான போக்குவரத்து மாற்றங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சூழ்நிலையில் காவல்துறை இல்லாததால் இளைஞர்கள் தானாக முன்வந்து போக்குவரத்தை சரி செய்தது வாகன ஓட்டிகள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

காவல் நிலையம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள்

கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த குமரேசன். இவர் மந்தாரக்குப்பம் காவல் நிலையம் அருகே மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மழை பெய்ததால் இரவு முன்னதாகவே கடையை பூட்டிவிட்டு குமரேசன் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார் அப்பொழுது அவரின் கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்கு உள்ளே சென்று கல்லாவை பார்த்த பொழுது அதிலிருந்த 31,500 ரூபாய் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கடைக்குள் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த மூன்று சிகரெட் பாக்கெட்டுகளையும் இத்துடன் திருடி சென்றதும் மேலும் அருகில் இருந்த இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து குமரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் கடையை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரவு நேரங்களில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் இராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் முழு நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் காவல் நிலையம் அருகே மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற இச்சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேரும் சகதியுமான சாலை.. கிராம சபையில் போடப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்க விட்ட ஊராட்சி நிர்வாகம்!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வானதி ராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர் கே சிட்டி அமைத்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள நிலைகள் பொதுமக்களில் அடிப்படை தேவையான சாலை வசதி இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர் வானதிராயபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிதியினால் வானதிராயபுரம் கிராம பகுதியில் மட்டுமே பல அரசு திட்டங்களும் என்.எல்.சி இந்தியா நிறுவன சுரங்கம் 1A அருகாமையில் உள்ள கிராமம் என்பதால் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல திட்டங்கள் வானதி ராயபுரம் கிராம பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கையில் ஆர் கே சிட்டி பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் உருவாகி வருகின்றது இப்பகுதி இன்னும் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பாடமல் உள்ளதாக தெரிவித்து வரும் வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகம் பல ஊராட்சி திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

கடந்தாண்டில் ஆர் கே சிட்டி பகுதியில் உள்ள ஒரே ஒரு தெருவிற்கு மட்டும் சாலை வசதி அமைக்கப்பட்டது.சாலை அமைக்க பொது இடம் இல்லை என்று கூறிவரும் வாணிதராயபுரம் ஊராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எந்த நிதியில் ஒரே ஒரு சாலையை அமைத்தது என்று கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இன்று வரை மீதமுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மேற்கொள்ளபட வில்லை இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் கூலி வேலைக்கு செல்லும் தினக்கூலி தொழிலாளிகள் மற்றும் அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினாலும் ஆம்புலன்ஸ் வாகனம் மழைக்காலங்களில் இப்பகுதிக்கு வந்தால் சேற்றில் சிக்கிக் கொண்டு சிரமப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் சாலையை செம்மல் நிரப்பி சமன்படுத்தி கொடுக்குமாறு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை வசதி குறித்து கோரிக்கை வைத்தும் இன்று வரை சாலை வசதி மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு இதுபோன்று ஒரு நாள் மழைக்கே சேரும் சகதிமாக காட்சி அளிக்கும் RK சிட்டி பகுதியில் தற்காலிகமாக செம்மண் கிராவல் கொட்டி சாலையை சீர் செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது மேலும் மழை தொடர்ந்து பெய்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.

ஏல சீட்டு நடத்தி ரூ. 17 லட்சம் மோசடி பொதுமக்கள் காவல் நிலையத்தில் போலீசில் புகார்

கடலூர் மாவட்டம், முதுநகர் சுத்துகுளம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் கடலூர் முதுநகர் காவல் நிலைத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தங்கள் பகுதியில் வசித்த இன்பராஜ் மனைவி லட்சுமி தேவி என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல சீட்டு நடத்தி வந்தார். நாங்கள் அவரிடம் பல தவணைகளில் பணம் கட்டி வந்தோம். இவ்வாறாக எங்களிடம் மொத்தம் ரூ.17 லட்சம் அவர் வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில் திடீரென லட்சுமிதேவி வெளியூர் சென்று விட்டார். இதையடுத்து லட்சுமிதேவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எங்களது பணம் குறித்து கேட்டபோது, நான் எந்த பணமும், யாரிடமும் வசூலிக்கவில்லை. அதனால் பணம் எதுவும் தர முடியாது எனக்கூறி மிரட்டுகிறார்.

எனவே எங்களிடம் லட்சுமி தேவி வசூல் செய்த ரூ.17 லட்சம் மற்றும் 1 பவுன் நகையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியத்தை அ டுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பரை தவிர்த்து வாழை இலையை பயன்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நகரம் முழுவதும் உள்ள அனைத்து உணவகத்திலும் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என கூறி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு வாழை இலையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி வாழை இலையை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுபினர்.

நெய்வேலியில் தண்ணீரை சேகரித்த அதிகாரிகள்..!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் பாதரசம் கலந்திருப்பதாகவும், மண்வளம் மற்றும் காற்று மாசடைந்து இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தனியார் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 10-ந்தேதி சென்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.

அதில் , வல்லனர் குழுவை அமைக்க உத்தரவிடபட்டு அதன்படி, மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அய்வு செய்ய 5 பேர் கெர்ணட குழுவை நியமித்து மாசுகட்டுப்பாட்டு வரியம் அமைத்தது. தமிழ்நாடு நீர்பகுப்பாயம் துறையின் தலைமை குடிநீர் பகுப்பாய்வாளர் சுஜாதா உத்தரவின்பேரில் துணை தலைமை குடிநீர் பகுப்பாய்வாளர் கேசவன், கிண்டி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பூபதி, ஷேக்தாவுத் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் காலை நெய்வேலி வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தெற்குவெள்ளூர் வெளிக்கூனங்குறிச்சி, பெரியாக்குறிச்சி, மேல்பாப்பன்பட்டு, குறவன்குப்பம், பழையநெய்வேலி, மேல்பாதி, கீழ்பாதி, வடக்குசேப்ளாநத்தம், உய்யகொண்டராவி, வடக்குவெள்ளூர், காட்டு குறிச்சி, தொப்புளிக்குப்பம், அம்மேரி, ஆதண்டார்கொல்லை உள்ளிட்ட 33 கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் குழாய், ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் மாதிாிகளை சேகரித்தனர்.

ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் சபா. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் தேவகி ஆடலரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேலாளர் ஜெயசீலன், பொறியாளர், அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 11-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மேலிருப்பு தனபதி கருப்பு முகமூடி அணிந்து கலந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வார்டு பகுதியில் உள்ள மக்கள் குறைபாடுகளை தீர்க்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கருப்பு முகமூடி அணிந்து கலந்து கொண்டேன் என்று தெரிவித்தார். இதனால் ஒன்றியக்குழு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு… அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல்… விடுதலை சிறுத்தைகள் கட்சி மறியல் போராட்டம்

கடலூர் மாவட்டம், கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபகுதியில் சாலையை சரியான முறையில் அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாலையை அகலப்படுத்தாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணமான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக கவுன்சிலரின் மாமூல் ‘தினமும் 100 ரூபாய் வெட்டு…’

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன் மாலை, இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சிலர் பாஸ்ட் புட் பிரியாணி கடை நடத்துகின்றனர். அந்த கடைக்கு 5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சென்று, ‘போக்குவரத்துக்கு இடையூறா இங்கே பிரியாணி கடை நடத்துறீங்க… எனக்கு தினமும் நூறு ரூபாய் தரணும்’ என்று கேட்கிறார். அதற்கு கடை நடத்துபவர், ‘அதான் அவ்வப்போது வந்து வாங்கிட்டு போறீங்களே போதாதா? தினமும் 100 ரூபால்லாம் தர முடியாது.

நாங்க கடைக்கே 2,500 ரூபா வாடகை கொடுக்க வேண்டியிருக்கு, உங்களுக்கு 3 ஆயிரம் கொடுக்கனும்னா எப்படி முடியும்?’ என்று பதில் அளிக்கிறார். இதற்கு, ‘எனக்கு பணம் தராட்டா இங்க கடை போட விடமாட்டேன்’ என மிரட்டுகிறார் கவுன்சிலர். அதற்கு கடை நடத்தும் இளைஞர், ‘நானும் இந்த ஊர்க்காரன்தான், வக்கீல்தான், நாங்க கடைபோடுவோம். அண்ணே உங்களுக்கு மரியாதை கொடுக்குறேன். நீங்க இப்படி பண்ணாதீங்க…’ என்கிறார். இப்படி கவுன்சிலருக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் தொடர்கிறது. கவுன்சிலரின் மாமூல் கலாட்டா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.