மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பாதியில் ஓட்டம்..!

கடலூர் மாநகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று மேயர் சுந்தரிராஜா தலைமை நடைபெற்றது.இந்த கூட்டதிற்கு துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சி கூட்டத்தில், பாமக கவுன்சிலர் சரவணன் கடலூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தார்.

பின்னர் மற்ற கவுன்சிலர்கள் நாங்களும் பேச வேண்டும். ஒருவர் மட்டும் நீண்ட நேரம் பேசினால் எப்படி என கூறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மாமன்ற உறுப்பினர்கள் இடையே மைக்கில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்த போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவதால் தங்களது பணிகளே தடைப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் கடுப்பான மாநகராட்சி ஆணையர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என கூறிய நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கூட்டம் முடிக்கப்பட்டதாக அறிவித்து பாதியிலேயே வெளியேற முற்பட்டார். அப்போது திமுக கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக கோரிக்கை வைத்தால் மேயர் கண்டுக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்நிலையில், கூட்டம் காலை 10.40 மணிக்கு தொடங்கி 11.25 மணிக்குள் முடிவடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.