கதறும் பாஜக கவுன்சிலர்: ‘மேடை போட்டால் நீங்கள் எல்லாம் தலைவராகி விடுவீர்களா?. கட்சியில் நிர்வாகிகளை சேர்க்க நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டோம்…!

கடலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தனித்தனியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 28-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். பாஜக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் தனியாக அலுவலகம் அமைத்து தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த கவுன்சிலர் சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாஜக மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பாஜக மாவட்ட, மாநில நிர்வாகிகளை தகாத வார்த்தையால் கூறி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வீடியோவில், ‘மேடை போட்டால் நீங்கள் எல்லாம் தலைவராகி விடுவீர்களா?. கட்சியில் நிர்வாகிகளை சேர்க்க நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டோம். அண்ணாமலை ராணுவ வீரர் பற்றி பேசுகிறார். நான் ஒரு கவுன்சிலர். என் மீது திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளது, சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதுபற்றி அண்ணாமலை ஏன் பேசல?. இந்த கட்சிக்காக என் வாழ்க்கையே இழந்து விட்டேன்.

என்ன மீறி நீங்க எப்படி கட்சிய வளர்க்கீங்கக்கனு பாக்கேன்,’ என கூறிய சக்திவேல், அங்கிருந்த மாவட்டத் தலைவர் மற்றும் பாஜக நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசி ஒவ்வொருத்தனையும் கொல்லாம விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பாஜவினர் மட்டுமல்ல கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

சில்வர் பீச்சில் ‘பன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி

தமிழக அரசு, போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை இணைந்து கடலூர் சில்வர் பீச்சில் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்களிடமும் போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘பன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காலை 5.30 மணிக்கே சில்வர் பீச்சில் குவிய தொடங்கினர். தொடர்ந்து சில்வர் பீச்சில் அமைக்கப்பட்ட திறந்த வெளி மேடையில் காலை 6 மணிக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கரும காரிய கொட்டகை சுவர் இடிந்து விழுந்தது… தரமின்றி அமைப்பதாக கிராம மக்கள் புகார்

கடலூர், புதுப்பேட்டை கரும காரிய கொட்டகை பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மேல் அருங்குணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கருமகாரிய கட்டிடம் கட்ட ஒன்றியக்குழு பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் பணி தொடங்கப்பட்டது. இதில் தரைத்தளம் வரை சுவர் எழுப்பப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இக்கட்டிடத்தின் ஒரு புற அடித்தள சுவர் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்து வந்து தரமின்றி பணி நடைபெறுவதாக கூறி பணியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உரிய ஆய்வு செய்து கட்டிட பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதுவரை கட்டிட பணி நடைபெறக்கூடாது எனவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் கலாசார முறைப்படி பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம்பிடித்த வாலிபர்

காதலுக்கு கண் இல்லை காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். மொழி, இனம், அந்தஸ்து என எந்த பாகுபாடும் உண்மையான காதலுக்கு இல்லை என்பதையே இவ்வாறு சொல்வதுண்டு. அன்பும், பாசமும், புரிதலும் இருந்தால் போதும். கடல் கடந்த காதலும் நிச்சயம் கைகூடும் என்று பல சினிமாக்களில் பார்த்திருப்போம். அதேபோன்ற ஒரு சம்பவம் தான் கடலூரில் நடைபெற்றுள்ளது.

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு பணி புரியும் சக ஊழியரான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவருக்கும் பத்மநாபனை பிடிக்கவே, இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் காதல் திருமணம் செய்வது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இருவீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, தமிழ் கலாசாரப்படி மணமகன் வீட்டில் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக காதலி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை பத்மநாபன் கடலூருக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நேற்று பத்மநாபனுக்கும், ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு வெள்ளக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படியும், தமிழ் கலாசாரப்படியும் திருமணம் நடந்தது. மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போலவே சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்திருந்தது அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தது.

திருமணத்தின்போது பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாசார முறைப்படி வேட்டி, சேலை அணிந்து கலந்து கொண்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, தமிழ் கலாசார முறைப்படி பெண் தமிழக பெண் போல் சேலை அணிந்து, பூ, பொட்டு வைத்து திருமணம் செய்து கொண்டதை பொதுமக்கள் வெகுவாக பார்த்து ரசித்தனர்.