டிடிவி தினகரன்: இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை..!, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை…!

1996-ம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது முதலே டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை ‘சேர்மன்’ என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர், முதலமைச்சர் என அடுத்தடுத்து பெரிய பதவிகளை அலங்கரித்த பிறகும் கூட பழைய பாசத்தோடு சேர்மன் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல நட்பு உண்டு. எனினும், ஜெயலலிதா – சசிகலா குடும்பத்தினர் இடையே சில ஆண்டுகள் இருந்து வந்த பிணக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மேற்கொண்ட தர்ம யுத்தம் ஆகியவை காரணமாக பல ஆண்டுகளாகவே இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனித்து இயங்கி வருகிறார்.

அப்போது முதல், டிடிவி தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறி வந்தார். தினகரனும் அவ்வாறே கூறினாலும், பல மாதங்களாக அதற்கான சூழல் அமையவில்லை. அண்மையில் தான் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். 2024 தேர்தலைக் குறிவைத்து, அதிமுக கூட்டணியில் இணையும் முடிவில் தினகரன் இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் உடன் பரஸ்பர நல்லுறவைக் கடைபிடித்து வருகிறார். இந்த நட்பு பாலத்திற்கு ஃபெவிகால் போடும் வகையிலேயே இன்று தேனியில் ஓபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஓபிஎஸ் உடன் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அதே இடத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு: டி.டி.வி.தினகரன் 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, முதல் அறிமுகக் கூட்ட​ம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அத​ன் பிறகு அதே பங்களாமேடு பகுதியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள நெஞ்சம் நிறைந்த அருமை அண்ணன் நாமெல்லாம் இதய பூர்வமாக மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கும் டிடிவி தினகரன் சார் இங்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

மேலும், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும்.” என்றார்.

டிடிவி தினகரன் பேசுகையில், “அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை. நாங்கள் இணைந்தது இயற்கையாக நடந்திருக்கிறது. துரோகிகள் அபகரித்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட சின்னத்தை மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” எனப் பேசினார்.

கோடநாடு வழக்கில் கைகோர்த்த ஓபிஎஸ், தினகரன்..

கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த காவலர் கொலை, மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தொடர்ந்து கோடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியிலேயே விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை முழுவீச்சில் நடைபெறவில்லை.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

திமுக அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஆதரவு அளித்து, ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அமமுகவினரும் கலந்து கொள்வார்கள் என அறிவித்தார்.

\

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் கை கோர்த்துள்ள நிலையில், இரு தரப்பும் ஒன்றாகப் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரு தரப்பு நிர்வாகிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

எடப்பாடி ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்கள் அழிப்பு.. டிடிவி தினகரன் பகீர் தகவல் இந்நிலையில், அதிமுகவின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனக் கோரி அதிமுகவினர் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பு நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக கொடி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என நீலகிரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு பலம் பெருகி வரும் சூழலில், அவரது தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இருவரும் கை கோர்த்துள்ள சூழலில் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என ஈபிஸ் தரப்பு முறையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.