ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால் நல்லது..!

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால், அவருக்கு நல்லது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.

அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

அப்போது, தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். அதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு வந்தோம். எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலாளர்களை வைத்து தாக்கினார்கள். அதுதான் உண்மை. அதிமுக அலுவலகத்தில் நடந்தது என்ன? எங்களை தாக்கிய பின், அடியாட்களை தலைமை கழகத்திற்கு அழைத்து வந்துவிட்டு எங்கள் மீது பழிபோகிறார்கள். இது அனைத்தும் காவல் துறையினரின் பதிவுகளில் உள்ளது. அதேபோல் பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்ற சூழல் வரும். அதனை திரும்ப திரும்ப சொல்கிறேன். அதிமுக வெல்லவில்லை ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வெற்றிபெற கூடிய வாய்ப்புகளே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வருகிறார். ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம் என்று தானே என்னிடம் ஆட்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.