டிடிவி தினகரன்: இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை..!, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை…!

1996-ம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது முதலே டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை ‘சேர்மன்’ என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர், முதலமைச்சர் என அடுத்தடுத்து பெரிய பதவிகளை அலங்கரித்த பிறகும் கூட பழைய பாசத்தோடு சேர்மன் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல நட்பு உண்டு. எனினும், ஜெயலலிதா – சசிகலா குடும்பத்தினர் இடையே சில ஆண்டுகள் இருந்து வந்த பிணக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மேற்கொண்ட தர்ம யுத்தம் ஆகியவை காரணமாக பல ஆண்டுகளாகவே இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனித்து இயங்கி வருகிறார்.

அப்போது முதல், டிடிவி தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறி வந்தார். தினகரனும் அவ்வாறே கூறினாலும், பல மாதங்களாக அதற்கான சூழல் அமையவில்லை. அண்மையில் தான் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். 2024 தேர்தலைக் குறிவைத்து, அதிமுக கூட்டணியில் இணையும் முடிவில் தினகரன் இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் உடன் பரஸ்பர நல்லுறவைக் கடைபிடித்து வருகிறார். இந்த நட்பு பாலத்திற்கு ஃபெவிகால் போடும் வகையிலேயே இன்று தேனியில் ஓபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஓபிஎஸ் உடன் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அதே இடத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு: டி.டி.வி.தினகரன் 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, முதல் அறிமுகக் கூட்ட​ம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அத​ன் பிறகு அதே பங்களாமேடு பகுதியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள நெஞ்சம் நிறைந்த அருமை அண்ணன் நாமெல்லாம் இதய பூர்வமாக மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கும் டிடிவி தினகரன் சார் இங்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

மேலும், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும்.” என்றார்.

டிடிவி தினகரன் பேசுகையில், “அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை. நாங்கள் இணைந்தது இயற்கையாக நடந்திருக்கிறது. துரோகிகள் அபகரித்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட சின்னத்தை மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” எனப் பேசினார்.

எடப்பாடி பூ சுற்றுகிறார்.. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவே இல்லை..

ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காதில் பூ வைத்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியது, இத்தனை நாளாக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் பழனிசாமி பூ சுற்றிக் கொண்டு இருந்தார். நானும் ரொம்ப நாளா வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன். உங்களை யார் பொதுச்செயலாளர் என்று சொன்னது.

நீங்களாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். பொதுக்குழுவில் காசு கொடுத்து உங்கள் ஆட்களை வைத்து நீங்களாகவே சொல்லிட்டு இருக்கீங்க… இன்னும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை. தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை. எப்போ பார்த்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட காலமாக அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி சொத்து என சொல்லிக்கொண்டு அவரது வீட்டு சொத்து போல இதை கொண்டு போய்ட்டு இருக்காங்க.

வேறு வழியில்ல்லை. எடப்பாடி ஏமாற்றுவதால் ஊடகமும் சேர்ந்து அதிமுக என்றால் பழனிசாமிதான் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலை தொடர்ந்து நடக்கிறதை பார்த்தோம். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் தெளிவாக உள்ளது. 2018 ல் அனுப்பப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பது ஏற்றப்பட்டுள்ளது. அதை அனுப்பியது ஓபிஎஸ்- இபிஎஸ் தான். இது தேர்தல் கமிஷனுக்கு முதலில் போய்விட்டது.

போன பிறகு இவர் ஒரு ரூலை போட்டு அதற்கு பிறகு நாங்கள் திருத்தம் கொண்டு வந்து இருக்கிறோம். அந்த திருத்தத்தில் என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருக்கிறார்கள் என எடப்பாடி ஒரு கடிதத்தை அனுப்புகிறார். தேர்தல் ஆணைய வெப்சைட் எதை சொல்லுதோ அவர்கள்தான் அத்தாரிட்டி… மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் 14 கட்சியை வைத்துள்ளது. 14 கட்சி வெப்சைட்டிலும் போனாலும் சமீபத்திய திருத்தம் தான் இருக்கும்.

ஆனால், 2018 திருத்தம் உள்ளது. ஏன் இப்படி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால், பழனிசாமி பதிவு செய்ததை நாங்கள் எடுத்துக் கொண்டோம். சப்ஜெட் டூ நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று சொல்லியிருக்கிறது. முதலில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவில் இருப்பதில் எந்த நிபந்தனையும் இல்லை.

அது ஏற்றியது அப்படியே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆவணங்களை ஏற்கும் போது மட்டும் நீதிமன்ற தீர்ப்பு என்ன வருதோ அதை பொறுத்துதான் நாங்கள் கணக்கில் எடுக்க முடியும். நீங்கள் கொடுத்ததாக ரெக்கார்டில் வைத்துக் கொள்கிறோம் என்றுதான் தேர்தல் ஆணைய செயலாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கிரிமினலாக என்ன செய்து கொண்டார் என்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

நாங்கள்தான் எல்லாம். நாங்கள்தான் பொதுச்செயலாளர் என்று என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி பெரும் ரகளை நடந்ததை பார்த்து இருப்பீர்கள். இனிமேல் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னால் பொடிப்பொடியாக்கி விடுவோம்” என தெரிவித்தார்.

கட்சிக்காக இறங்கி வந்த ஓபிஎஸ்..! சீண்டாத எடப்பாடி பழனிசாமி..!

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வம் சமாதானமாக பேச முன் வந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வர மறுத்துள்ளது. இந்த தேர்தல் மூலம் அதிமுகவில் சமாதானம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் இடையிலான மோதல் இன்னும் பெரிதாகி உள்ளது.

அதிமுகவில் எப்போது என்ன பிரச்சனை வந்தாலும்.. கூடவே ஒரு இடைத்தேர்தலும் வந்துவிடும். அதாவது 2017-ல் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அதேபோல்தான் இப்போது .தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் ஜூலை 9-ந் தேதி நடக்க உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், என்று மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட 500 பதவிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இன்று படிவம் ஏ மற்றும் பி இரண்டையும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கவில்லை என்றால் வேட்பாளர்கள் அதிமுக வேட்பளார்களாக கருதப்பட மாட்டார்கள். இந்த படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ்தான் கையெழுத்து போட வேண்டும். ஆனால் எடப்பாடி தரப்போ.. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகிவிட்டது என்று வாதம் வைத்து வருகிறது. அப்படி இருக்கும் போது.. ஓபிஎஸ் இதில் கையெழுத்து போடுவதை எடப்பாடி விரும்பவில்லை. அப்படி இருவரும் கையெழுத்து போட்டால்.. அதை நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டி.. பாருங்க இன்னமும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கும்.

இதை தடுக்கும் விதமாக இந்த மனுக்களில் கையெழுத்து போடவே எடப்பாடி தரப்பு மறுத்து வருகிறது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்திலும், தான்தான் இன்னும் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபிக்கும் வகையிலும்  இந்த மனுக்களில் கையெழுத்து போட முன் வந்தார். படிவம் ஏ மற்றும் பியில் நான் கையெழுத்து போடுகிறேன் என்று ஓபிஎஸ் இறங்கி வந்தார்.

இதில் கையெழுத்து போட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ரெடியா என்று ஓபிஎஸ் கேட்டார். அதோடு எடப்பாடிக்கு இது தொடர்பாக கடிதமும் எழுதினார். ஆனால் இந்த கடிதத்தை அவர் கையால் கூட சீண்டவில்லை. அதை தொட்டுப்பார்க்க கூட அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியே உதவியாளர் மூலமே கடிதத்தை திருப்பி அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.