பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு கைது வாரண்ட்..!

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு வரதட்சணை மோசடி வழக்கில் வாரண்ட் பிறப்பித்து கோயம்புத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 -ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஏ.பி. முருகானந்தம் மீது பதிவு செய்யப்பட்ட வரதட்சணை மோசடி வழக்கில், பல முறை விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில், அவருக்கு வாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2014 -ஆம் ஆண்டு ஞானசெளந்தரி என்பவரை திருமணம் செய்த ஏ.பி.முருகானந்தம், 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் நகை, ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்றுள்ளார். சில மாதங்களில் ஞானசெளந்தரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஞானசௌந்தரியின் தந்தை, தனது மகளுக்கும் முருகானந்தத்திற்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை என்பதால் அதைக் காரணம் காட்டி, அடித்து கொடுமைப்படுத்தி தற்கொலை செய்யத் தூண்டியுள்ளதாக புகார் அளித்தார். சொத்துக்காக தனது மகளை திருமணம் செய்ததோடு, அதன்பிறகு அவரை துன்புறுத்தி கொன்றுவிட்டதாக ஞானசௌந்தரியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், திருமணத்தின்போது தான் வழங்கிய சீர்வரிசை பொருட்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி ஞானசௌந்தரியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஏபி முருகானந்தம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்: மரியாதையாக பேசுங்க.. இல்லேனா கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன். சரியா..!?

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, கண்காணிப்பு நிலைக்குழுவினர் என அனைவரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட நேரத்தில் திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், தனது காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரையும் சோதனையிட தேர்தல் அதிகாரிகள் முயன்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் எடுத்தெரிந்து பேசியுள்ளார்.

இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அதிகாரிகள் அவரது காரை சற்று ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த முருகானந்தம், அதிகாரிகளை மிரட்டியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியையும், நிலைக்குழுவினரையும் “உங்கள் பெயர் என்ன?, என்னவாக இருக்கீங்க?” என்றெல்லாம் அதிகார தொனியில் மிரட்டலாக கேட்டார்.

அவரது கேள்விக்கும் அதிகாரிகள் டிராபிக் ஆகும் என்பதால்தான், காரை ஓரமாக நிறுத்த சொன்னோம் என்று பதில் கூறவே, அதற்கு “மரியாதையாக பேசுங்க.. இல்லேனா கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன். சரியா?” என்று மிரட்டினார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.