ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரை தெரியும், அந்த அதிகாரியை தெரியும்.. அவர் என் மச்சான்.. அவர் என் மாமா.. என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று பலர் லட்சக்கணக்கில் ஏமாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், புங்கம்பேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு தனது உறவினர் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக கூறி ஜோதி என்ற பெண் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் 25 நபர்களிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் வரை திரட்டி ஜோதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஜோதி யாருக்கும் வேலை வாங்கி தராமல் சதீஷ்குமாரை பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி என்பவரை காவல்துறை கைது செய்தது.