எஸ்.ஆர்.எம் கல்லூரி கல்லூரியில் காவல்துறை என மிரட்டி அட்மிஷன் கேட்ட போலி கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கல்லூரிக்கு காவல்துறையினர் போல் காக்கி பேண்ட், ஷூ அணிந்து வந்த நபர் ஒருவர் கல்லூரி வரவேற்பாளரிடம் நான் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனக்கு ஒரு எம்.டெக் சீட் வேண்டும் என்றும் அதுவும், ஸ்காலர்ஷிப்புடன் வேண்டுமென கேட்டுள்ளார். அங்கிருந்த கல்லூரி ஊழியர்கள் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். உடனே, அந்த நபர் காவல்துறை உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதில் குளறுபடி இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே மற்றொருபுறம் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் அந்த நபரை பிடித்து அவரது அடையாள அட்டையை வாங்கி சோதித்ததில் அது போலி என தெரியவந்தது. பின்னர் மறைமலைநகர் காவல்துறை அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் முஜீத் என்பது தெரியவந்தது. மேலும் டிப்ளமோ படித்த அப்துல்முகீத் கடந்த ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம், தான் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அப்துல் முஜீத் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் காவல்துறை உடையில் உதவி ஆய்வாளர் போன்று வளம் வந்த அப்துல் பலரை ஏமாற்றி் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று அப்துல் முஜீத் தனியார் கல்லூரியில் தான் உதவி ஆய்வாளர் என்றும் போலி அடையாள அட்டையை காண்பித்து கல்லூரி ஊழியர்களை மிரட்டி அட்மிஷன் கேட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறை அப்துல்முஜீத் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான போலி உதவி ஆய்வாளர் அப்துல் முஜீத் இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.