தொண்டர்கள் மத்தியில் கூட்டணி சரியில்லை என எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆவேசம்

கூட்டணி சரியில்லை என அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம் பேசினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் செல்லாண்டிப்பட்டி தனியார் மஹாலில் இன்றுநடைபெற்றது.

அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை வழங்கி பேசியபோது, ”கிருஷ்ணராயபுரம் தொகுதி 1989-ஆம் ஆண்டு சேவல் சின்னம் வென்ற 27 தொகுதிகளில் ஒன்றாகும். கேட்காமலே கொடுத்த தலைவர் MGR சத்துணவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.

MGRக்குப் பிறகு ஜெயலலிதா பல்வேறு மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கினார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை போட்டியிட வைத்தார். 1989, 91ஆம் ஆண்டுகளில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 1991ஆம் ஆண்டு திமுக இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாற்றங்கள் உருவாகும்.

நாம் அதற்கான பணிகளை சிறந்த முறையில் அமைத்திட வேண்டும். விரைவில் அதிமுக ஆட்சி மலரும். அதற்கான காலமாற்றம் உருவாகிறது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். எத்தனையோ திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மலரவேண்டும் என ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ”கரூரில் அதிமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று அக்டோபர் 28 ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்த்து வருகின்றனர். கட்சியினரை ஜாமீனில் வெளியே எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தாந்தோணி ஒன்றியத்தில் 16,800 உறுப்பினர் படிவங்கள் உள்ளன. தாந்தோணி ஒன்றியத்தில் 12 ஆண்டுகள் செயலாளராக இருந்துள்ளேன். 303 கிளைகள் இருந்தன. தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்பது உறுப்பினர் அட்டைகள் வழங்குவதிலே தொடங்கிவிட்டது.

கூட்டணி சரியில்லை. தலைவர்கள் விரைவில் நல்ல கூட்டணியை அமைப்பார்கள். திமுக கூட்டணி விரைவில் உடையும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும்” என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது..!

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி கைது செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.