தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு..!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ‘‘யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அக்டோபர் 14-ஆம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், அக்டோபர் 10-ஆம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது’’ என வாதிட்டார்.

அப்போது பேசிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே டெண்டர் வழங்கப்பட்டு, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என ஏன் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘காரணமின்றி அரசை குறை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது’’ என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

சுகாதார ஆய்வாளர் மீது தூய்மைப் பணியாளர் உயர் நீதிமன்றத்தில் புகார்..!

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி தூய்மைப் பணியாளர் அளித்துள்ள புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் உதவி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளேன். என்னுடன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.

சுகாதார ஆய்வாளராக ரமேஷ் என்பவரின் கீழ் நாங்கள் பணியாற்றுகிறோம். அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இதனால் என்னையும், என்னை போன்ற தூய்மைப் பணியாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சாதியைச் சொல்லி திட்டுவதும், பெண்கள் மீதான வன்கொடுமை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் மீது மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம். சுகாதார ஆய்வாளரின் நடவடிக்கை, வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, “மதுரை திடீர் நகர் காவல் உதவி ஆணையர், இருதரப்பினரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

ஆறு மாதங்களுக்குள் மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லம்: தமிழக அரசு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆறு மாதங்களுக்குள் மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லத்தை அரசு அமைக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் நடைமேடை, பேருந்து நிறுத்தங்களில் ஆதரவின்றி தங்கியுள்ளனர்.

இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி மாவட்டந்தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தனியார் தொண்டு நிறுவனங்களால் முதியோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆறு மாதங்களுக்குள் ஒரு முதியோர் இல்லத்தையாவது அரசு அமைக்க வேண்டும்’’ என தமிழக அரசிற்கு உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றம் அதிரடி: தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத காவலரை கட்டாய ஓய்வு வழங்க வேண்டும்..!

தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் மணிமுத்தாறு மண்டபம் முகாமில் கடந்த 2003-ல் கிரேட்-2 கான்ஸ்டபிளாக சேர்ந்த பி.பழனிச்சாமி. இவர் கடந்த 2006-ல் 3 நாட்கள் விடுமுறை எடுத்தார். ஆனால், எந்த தகவலும் தெரிவிக்காமல் 21 நாட்கள் பணிக்கு வரவில்லை. இதேபோல், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு ஆவடி பட்டாலியனில் கிரேட்-2 கான்ஸ்டபிளாக 1997-ல் சேர்ந்த எம்.ஆரோக்கியசாமி. இவரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் 2002 நவம்பர் 1-ஆம் தேதி முதல் பணிக்கு வரவில்லை.

இதையடுத்து, இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி இருவரையும் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, பழனிச்சாமிக்கு பணி செய்வதற்கு விருப்பம் இல்லை. ஆரோக்கியசாமி ஏற்கனவே இதேபோல் 21 நாட்கள் பணிக்கு வரவில்லை. மருத்துவ சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடமையை சரியாக செய்யாமல் இருப்பது நடத்தை தவறுவதாகும். காவல்துறை இருவர் மீதும் முதலில் பெரிய தண்டனை தரவில்லை. தொடர்ந்து பணிக்கு வராததால்தான் பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமியை பொறுத்தவரை அவர் விடுமுறை எடுத்து தொடர்ந்து வராமல் இருந்துள்ளார். எனவே, அவரை பணி நீக்கம் செய்ததை மாற்றம் செய்து அவரை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும். ஆரோக்கியசாமியை பொறுத்தவரை பணிக்கு வராததற்கு அவர் கூறிய மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே, அவரை பணி நீக்கம் செய்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இருவருக்கும் விதிகளின்படி உரிய பணப்பலன்களை பெற உரிமை உள்ளது. அந்த பணப்பலன்களை சம்பந்தப்பட்ட துறை வழங்க வேண்டும் என பி.குமரேசன் உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள ரங்கம்மாள் அறக்கட்டளையானது, 1969 -ஆம் ஆண்டில் திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை துவக்கப்பட்டு நடத்தி வருகிறது.

இந்த ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்தனர். இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியும், அவர்கள் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் செந்தாமரைக்கு சாதகமாக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் அவர்களை காலி செய்ய முற்பட்டுள்ளனர்.

அப்போது தங்களை காலி செய்யும்படி நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகக் கூறி அதன் நகலை முருகானந்தம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவு போலியானது எனக்கூறி செந்தாமரை நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலியாக உயர் நீதிமன்ற உத்தரவு தயாரித்தது குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பது. அதன்படி இதுதொடர்பாக CBCID விசாரிக்க காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு அனுமதி கொடுத்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், 2 பேர் இறந்து விட்ட நிலையி்ல், மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதிகள் விடுவித்தனர். பின்னர் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, அவர்களை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு..! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாரத்தை கணக்கில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வீடு கட்டும் திட்டத்தை செயல்முறை படுத்தி வருகின்றது. ஆனால் எதிலும் ஊழல் செய்வதில் கரைதேர்ந்த ஊழல்வாதிகள் இந்த துறையும் விட்டு வைக்கவில்லை. ஆகையால், நட்டில் பல இடங்களில் ஊழல்வாதிகள் பிடிபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

அதன்வரிசையில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021.-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், “சாதாரண கருத்துக்களை கூறி விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மேலும், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதற்கு 6 நாட்கள் வரை தாமதம் ஆகிறது.

விளம்பரத்துக்கு அனுமதி தராதது தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை கேள்விக் குறியாகியுள்ளது. திமுகவின் மனு மீது இரண்டு நாட்களில் பரிசீலித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும் திமுகவின் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவு: மூத்தோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்; ‘எனக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவரும், அவரது தந்தை அம்பிகாபதியும் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தனர். அதை மறைத்து எனக்கு எதிராக மாமானாரும், மாமியாரும் சேர்ந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலரிடம் அதாவது மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர், என்னை வீட்டை விட்டு காவல் துறை உதவியுடன் வெளியேற்றி, வீட்டை மாமனார். மாமியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ன் படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. எனவே, இந்தச் சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. ஆகையால், மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார்.