சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி: ஏப்ரல் 21 -க்குள் கொடி கம்பங்களை அகற்று…! இல்லனா வழக்கு போடு..!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 -ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு கொடுத்துள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் ஏப்ரல் 21 -ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக்கம்படங்களை அகற்றப்பட வேண்டும். *அப்படி அகற்றவில்லயெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி: வங்கி மேலாளருக்கு ரூ.25,000 அபராதம்..!

கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் கடனை செலுத்திய பின்னரும் அடமான பத்திரங்களை கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் ரூ.25,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருக்கிறது. தென்காசியை சேர்ந்த மாரித்துரை என்பவர் ஆவணங்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்று கடனை கொஞ்சம் கொஞ்சமாக மாரித்துரை திரும்ப செலுத்தி இருக்கிறார்.

ஆனால் முழு கடனை அடைத்த பின்னரும் கூட, அடமானமாக வைக்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தர வங்கி மறுத்திருக்கிறது. காரணம் கேட்டால், கூடுதலாக ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை நேற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார்.

விசாரணையின் முடிவில் கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மட்டுமல்லாது, வரும் 17-ஆம் தேதிக்குள் அடமானத்திற்கு பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசு ஓராண்டுக்கு செலவிடும் தொகையை விட இது அதிகமாக கடந்த 2019-20 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, ரூ.8,495 கோடியை பொதுத்துறை வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து அபராதமாக பிடித்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, மினிமம் பேலன்ஸ் இல்லை, வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டீர்கள், எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வங்கிகள் பணம் பிடுங்குவாடு வழக்கம். ஆனால், வங்கி தலைமை மேலாளருக்கே நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

உயர்நீதிமன்றம் கேள்வி: மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா..!?

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எப்படி வேண்டுமானாலும் குழந்தை பிறக்கட்டும்…. அந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு..!

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொத்துக்களில் உரிமை கோருவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோரின் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2011-ல் உத்தரவிட்டது. இதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வாயிலாக பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொந்தமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது. அதே நேரம், பரம்பரை சொத்துக்களில் அவர்கள் உரிமை கோர முடியாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சட்டப்படி செல்லாத திருமணங்கள் மற்றும் சட்டப்படி பிரியாத தம்பதியரின் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக சொத்துக்களில் பங்கு கோரும் உரிமை உள்ளது.

இந்து வாரிசு சட்டத்தின்படி, சட்டப்பூர்வ ஆங்கீகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, பெற்றோரின் உழைப்பில் சம்பாதித்த சொத்து மற்றும் பரம்பரை சொத்துக்களின் பங்கு கோர அவர்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.