மோடி, யோகி ஆதித்யநாத் புகழ்ந்தது தப்பா சார்…! இதுக்கு போய் முத்தலாக் குடுத்துட்டாரு..!

உத்தர பிரதேச மாநிலம் பரெய்ச் நகரைச் சேர்ந்த மரியம் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் ஆகிய இருவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், அர்ஷத் தனது மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மரியம் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், திருமணத்துக்குப் பிறகு அயோத்தியில் உள்ள கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அயோத்தி நகரின் சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் என்னைக் கவர்ந்தன. இதையடுத்து, என் கணவர் முன்பு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினேன். இதனால் கோபமடைந்த என் கணவர் என்னை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

பின்னர் என் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி என்னை அயோத்தியில் உள்ள கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அப்போதும் என் கணவர் என்னை திட்டியதுடன், முதலமைச்சர் யோகி மற்றும் பிரதமர் மோடியையும் திட்டினார். பின்னர் மூன்று முறை தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துவிட்டு அடித்தார். கணவரின் தாய், தங்கை மற்றும் சகோதரர்கள் என அனைவரும் என் கழுத்தை நெரிக்க முயன்றனர். இதுகுறித்து பரெய்ச் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என மரியம் தெரிவித்துள்ளார்.

தீண்டாமை.. ஜோமாட்டோ ஊழியரிடம் உணவு வாங்க மறுத்து முகத்தில் எச்சில் துப்பி கொடுமை…

இன்றைய அவசர உலகில் மக்கள் சத்தான உணவு பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து செல்போன் மூலமாக ஆடர் செய்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். அதன்பின்னர் ஆன்லைன் வியாபாரம் சூடு பிடிக்க மருந்து, மாத்திரை, ஆடைகள் மற்றும்மல்லாமல் சூடான உணவு பொருட்களையே ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு கால சக்கரம் சுழன்றுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆன்லைன் வியாபாரம் பல தரப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி பேசு பொருளாகிறது. அதன் வரிசையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டியலினத்தவர் எனக்கூறி ஜோமாட்டோ ஊழியரிடம் உணவு வாங்க மறுத்து அவரை தாக்கி முகத்தில் எச்சில் துப்பிய கொடுமையான சம்பவம் இன்று பேசு பொருளாகியுள்ளது

உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகரான லக்னோவில் வினித் குமார் என்பவர் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் ஜோமாட்டோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லக்னோவில் வசித்து வரும் ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இதையடுத்து அந்த ஆர்டரை வினித்குமார் பெற்று கொண்டார்.

இதையடுத்து ஓட்டலில் அவர் உணவு வாங்கி கொண்டு ஆர்டர் செய்த நபரின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த நபரிடம் வினித் குமார் உணவு வழங்கினார். அப்போது அந்த நபர் வினித் குமாரின் பெயர், ஜாதியை கேட்டுள்ளார். இதனை வினித் குமார் கூற மறுத்துள்ளார். இருப்பினும் வினித் குமாரின் ஜாதியை அறிந்த அந்தநபர் பட்டியலினத்தவர் எனக்கூறி அவரிடம் உணவை வாங்க மறுத்துள்ளார்.

மேலும் உணவை அங்கிருந்து கொண்டு செல்லும்படி அவர் வலியுறுத்தி தீண்டாமையை கடைப்பிடித்துள்ளார். மேலும் வினித் குமார் ஆர்டரை ரத்து செய்யும்படி அவரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர் வினித் குமாரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். மேலும் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் சில நபருடன் சேர்ந்து வினித் குமாரை தாக்கியுள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வினித்குமார் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தை பெற்று கொண்டு, வினித்குமாரையும் மீட்டனர். பசிக்கு உணவு டெலிவரி செய்த ஜோமாட்டோ ஊழியரிடம் ஜாதியை கேட்டு தீண்டாமையை கடைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.