உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
அப்பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து கொன்றுவிட்டு நிர்வாண நிலையில் உடலை சாலையில் வீசி இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் உள்ள மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், உடல் கிடந்த இடம் அருகே ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் சாம்பல் நிற கால்சட்டை அணிந்திருந்தார்.
அதேவேளையில் பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடையின் துண்டுகள் இருந்தன. இதுகுறித்து காவல்துறை கூறும்போது, உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ஆனால் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அந்த பெண் அணிந்திருந்த உடைகள், நெடுஞ்சாலையில் பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட துணி மற்றும் செருப்புகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பெண் குறித்து காவல்துறை அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.