மாதம் ரூ.10 லட்சம் வரை கல்லா கட்டிய பெண் உதவி ஆய்வாளர் அதிரடி கைது..!

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த அஜிதா சரத் தம்பதியினர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தரவும், குண்டாஸ் பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருக்கவும் விபசார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமா, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு அஜிதா தன்னால் ரூ.10 ஆயிரம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்.இதையடுத்து உதவி ஆய்வாளர் ரமா அட்வான்சாக ரூ.3000 கொடுத்தால்தான் வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினரின் ஆலோசனைப்படி நேற்று காலை ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுகளை காவல் உதவி ஆய்வாளர் ரமாவிடம் அஜிதா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர் ரமாவை கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ரமாவின் மொபட்டில் சோதனையிட்டதில் இருக்கைக்கு அடியில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ரமா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் உதவி ஆய்வாளர் ரமாவை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். கைதான காவல் உதவி ஆய்வாளர் ரமா விபசார தடுப்பு பிரிவில் கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வந்தார். திருச்சி மாநகரை பொருத்தவரை 60 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. ஒரு சென்டருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உதவி ஆய்வாளர் ரமா அவரது வங்கி கணக்கில் கூகுள் பே மூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் என்று கணக்கிட்டாலே 60 மசாஜ் சென்டர்களுக்கு மாதம் ரூ.6 லட்சம். இதில் சில மசாஜ் சென்டர்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மாதம் ரூ.10 லட்சம் வரை உதவி ஆய்வாளர் ரமா பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மொத்த வசூல் பணமும் இவருக்கு மட்டும் சென்றதா? அல்லது உடன் பணியாற்றும் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளுக்கும் சென்றதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கடந்த 4 வருடங்களாக எஸ்ஐ ரமா விபசார தடுப்பு பிரிவில் இருந்து உள்ளதால் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.