தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் உதவி – ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது. அங்குள்ள மையத்தில் ஏராளமானோர் இந்த தேர்வினை எழுதினர். அப்போது ஒரு தேர்வறையில் இருந்த வாலிபர் ஒரு கருப்பு கலரில் வித்தியாசமான முறையில் முக கவசம் அணிந்திருந்தார்.
முக கவசம் என்பதால் கண்காணிப்பாளர்களும் விட்டு விட்டனர். சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வித்தியாசமான குரல் கேட்டது. இது அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வர்களின் அருகிலும் சென்று சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணிந்திருந்த வாலிபர் அருகில் தான் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது.
உடனே கண்காணிப்பாளர்கள் அந்த வாலிபரை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர், காதில் சிம்கார்டுன் கூடிய வாய்ஸ் மீட்டரை வைத்திருந்தார். அதன்மூலம் வெளியில் இருந்து இவருக்கு ஒருவர் பதில் சொல்ல, அதனை கேட்டு, இவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாய்ஸ் மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியது, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பச்சூரை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. இவர் கோவைப்புதூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன். காவல் உதவி – ஆய்வாளர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.
அதற்காக வாய்ஸ்மீட்டரை பயன்படுத்தி எழுதலாம் என முடிவு செய்தேன். அதன்படி தேர்வு அன்று, எனது தங்கை தேர்வறைக்கு வெளியில் இருந்து பதில்களை சொல்ல சொல்ல, அதனை வாய்ஸ் மீட்டர் வழியாக கேட்டு நான் தேர்வு எழுதினேன் என தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை பயிற்சி காவலர் நவீன் மற்றும் அவருக்கு உதவிய தங்கை சித்ரலேகா ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.