2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இந்த இரு கட்சிகளும் கூட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் பாஜக உடன் கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டார்கள். அதேநேரம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தாங்கள் இன்னும் பாஜக கூட்டணியில் தான் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “இந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப் போகிறார். தேர்தலுக்கு முன்பு என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. மக்கள் தீர்ப்பு என்ன என்பது தேர்தலில் தெரியும். அதிமுக கொடி, சின்னத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. தொண்டர்கள் பயன்படுத்துக கூடாது என்ற உத்தரவு எங்கும் இல்லை. எங்கள் தொண்டர்களின் வேகமும் உணர்வும் எப்படி இருக்கிறது என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும். எனக்குள் ஓடுவது அதிமுக ரத்தம்.. இந்த ரத்தத்தை மாற்றத் தீர்ப்பு அளிக்க முடியுமா..?
தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு, “இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை அது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அது தற்காலிக தீர்ப்பு மட்டுமே. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருப்பதால் எங்களால் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியும். அந்த உரிமையின் அடிப்படையில் கேட்போம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் தருவார்கள். மேலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் தனி சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நமட்டு சிரிப்புடன் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.