வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்கலாம். அரசு ஊழியர்கள் மீது ஒழிப்புதுறையினர் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள்.
சமீபக் காலமாக பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் கொடுத்து கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மதுரை விராதனூர் பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி முருகேசுவரி. கணேசன் கடந்த 2019-ஆம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்க வாரிசுச் சான்றிதழ் கேட்டு முருகேசுவரி விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பம் அப்போது நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. 2-வது முறையாக முருகேசுவரி வாரிசு சான்றிதழ் கேட்டு, விராதனூர் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவை அணுகி உள்ளாராம்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் இந்திரா, வாரிசுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ரூ.18 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பாத முருகேசுவரி, தன்னிடம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு பாடம் புகட்ட விரும்பினார். இதுதொடர்பாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசுவரியிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்தனர். இந்நிலையில், முருகேசுவரி, கிராம நிர்வாக அலுவலர் இந்திராவை தொடர்பு கொண்டபோது அவர் ரூ.18 ஆயிரத்துடன், மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகே வரும்படி கூறியுள்ளார். அந்த சமயத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அங்கு மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசுவரியிடம் இருந்து இந்திரா வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு துறை அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.