இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் கைது!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் மாதம் சாலையோரம் போலி சான்றிதழ்கள் சிதறி கிடந்தன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுப்பையா பாண்டியன் கருதப்பட்டார். இதையடுத்து, போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்த சிபிசிஐடி, அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனையை நடத்தினார்கள். அப்போது அவரது மனைவி பெயரிலும், போலி மருத்துவ சான்றிதழ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, போலி மருத்துவ சான்றிதழ் வழங்க, 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

போலி சான்று கும்பல்களுக்கு ஏஜென்ட் போல் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சுப்பையா பாண்டியன் கைதாகியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் முக்கிய நபரான கவுதமன் என்பவரை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல, முக்கிய குற்றவாளியான ஒஸ்தின் ராஜா என்பவருக்கும் காவல்துறை வலை விரித்துள்ளது.

தற்போது, சுப்பையா பாண்டியனை கடலூருக்கு அழைத்துவந்து சிபிசிஐடி விசாரணையை துவங்க உள்ளனர். சிதம்பரம் அருகே போலி சான்றிதழ்கள் கண்டெடுத்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில தலைவர் சுப்பையா பாண்டியனும் கைதாகி இருப்பது பரபரப்பை தந்து வருகிறது.