மருத்துவரை தாக்கிய விக்னேஷின் தயார் காவல் நிலையத்தில் புகார்..!

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி என்பவர் நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூரில் வசிக்கும் பிரேமாவின் சகோதரி தேவி உள்ளிட்ட உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘‘மருத்துவரை விக்னேஷ் கத்தியால் குத்தியது பற்றி முன்னரே எங்களுக்கு எதுவும் தெரியாது. அது பற்றி அவன் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி செய்யப் போகிறான் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவனைத் தடுத்திருப்போம். அவன் செய்த செயல் ஏற்புடையது அல்ல.

அதே நேரத்தில் அந்த மருத்துவரின் சிகிச்சை முறையால் எங்கள் வீட்டிலும் ஒரு உயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேச இங்கு யாருமே இல்லையே. மேலும், வீட்டில் இருந்த மருத்துவ ஆவணங்களையெல்லாம் காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். மருத்துவ அறிக்கைகள் இல்லாமல் அவருக்கு எப்படி மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்’’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை சக மருத்துவர்கள், பணியாளர்கள் சுற்றிவளைத்து சிலர் காலால் எட்டியும் உதைத்து தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விக்னேஷின் தாய் பிரேமா கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து அனுப்பினார்.

அந்த புகார் மனுவில், ‘என் மகன் விக்னேஷ் இதய நோயாளி. அவரை மருத்துவர்கள் உட்பட பலர் சுற்றி வளைத்து தாக்கினர். எனவே, மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.