வீட்டு வரி ரசீது வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் கைது..!

பெரம்பலூரில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்கலாம். அரசு ஊழியர்கள் மீது ஒழிப்புதுறையினர் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள்.

சமீபக் காலமாக பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் கொடுத்து கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூரில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர்-ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் வீடு ஒன்றை கட்டியுள்ளார். வேல்முருகனின் நண்பர் பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சோ்ந்த ரெங்கசாமியின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் இந்த வீடு கட்டும் பணிகளை கவனித்து அனுமதி கொடுத்துள்ளார். மேலும் சுபாஷ் சந்திரபோஸ் மூலமாக வேல்முருகன், தனது புதிய வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் வரி வசூலிப்பவராக பணிபுரியும் புதுக்கோட்டை காவேரி நகர் எஸ்.எம்.காலனியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் இடைத்தரகரான பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்த ராமு ஆகியோர் சுபாஷ் சந்திரபோசிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஷ் சந்திரபோஸ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சுபாஷ் சந்திரபோசிடம் லஞ்ச ஒழிப்புதுறை கொடுத்தனுப்பினார்கள். அதன்படி சுபாஷ் சந்திரபோஸ் நேற்று மதியம் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள நகராட்சி வரி வசூல் மையத்திற்கு சென்றார். அந்த ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சிவக்குமார், ராமுவிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை சிவக்குமார், ராமு ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.