போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி..!

சென்னை, ஆவடி காமராஜர் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து ராஜசேகரன் அவரது இடத்திற்கான வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது, அவரது இடம் வேறு இரண்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான அந்த இடத்தை ஆவடி அடுத்த சேக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான பூஞ்சோலை, இன்பகுமார், சரத்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜசேகரன் பெயரில் உள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து 2 நபர்களுக்கு இடத்தை பிரித்து ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகரன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் வள்ளி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதன்பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பூஞ்சோலை என்பவரை கைது செய்து விசாரித்ததில் ராஜசேகரன் இடத்தை 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை பூஞ்சோலை மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

தெரிந்தவர்… தெரியாதவர்களிடம் அடையாள அட்டை…மொபைல் எண்…. கொடுக்கிறீர்களா..!? உஷாரய்யா… உஷார்…!

சென்னை, ஆவடியை சேர்ந்த கௌதமி என்பவர் தனது பெயரில் யாரோ தனியார் வங்கியில் தனது மொபைல் மற்றும் முகவரியை மாற்றி கடன் அட்டை பெற்று, சுமார் ரூ.7,58,029 வரை அமேசானில் பொருட்கள் வாங்கியுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் ஆய்வாளர் மகாலஷ்மி தலைமையிலான காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் முன்னாள் ஐசிஐசிஐ வங்கி ஊழியரான சைதாப்பேட்டையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவர் வங்கியில் வேலை பார்த்து வந்தபோது தனது உறவினர்களின் அடையாள அட்டை, மொபைல் எண்களை பயன்படுத்தி அவற்றின் மூலம் கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்கள் பெயரில் பெற்றுள்ளார். அதன்பின்னர் அபுபக்கர் சித்திக் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.