அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதற்கு ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்ட பெண்கள் கைது..!

அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதற்கு ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்ட பெண்கள் இருவரை ஆலங்காயம் காவல்துறை கைது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலையில் சேர வேண்டும் என்றால் போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் அவர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே அரசு வேலையில் சேர முடியும் என்கிற நிலை இன்றுள்ளது. மேலும் பல லட்சம் பேர் போட்டித் தேர்வுகள் எழுதனாலும் ஒருவருக்கு தான் வேலை கிடைக்கிறது. அதேநேரம் சிலர் குறுக்குவழியில் அரசு வேலையில் சேர விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றுவது நடக்கிறது.

மேலும், அங்கன்வாடி,போக்குவரத்து கழகம், நியாய விலை கடை போன்ற வேலைகளுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையிலான வேலையில் லஞ்சம் கேட்பதும் அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை பலர் சமர்பித்துள்ளனர். இதற்காக விண்ணப்பித்தவர்களை திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித்தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அப்துல் ஷாஹித் என்பவரிடம் ராமவதி, மற்றும் ஜம்ஷிகா ஆகியோர் செல்போனில் பேசி அவரது மனைவிக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்டார்களாம். இதைத்தொடர்ந்து பணம் தருவதாகக்கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரவழைத்தனர். அங்கு ஆட்டோவில் வந்த அவர்கள் இருவரையும் பிடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.