பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் ஆர்.சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி எந்திரம் மூலம் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் அகஸ்டின் மற்றும் பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் பங்கு குருவான, பெரம்பலூர் வட்டார முதன்மை குரு ராஜமாணிக்கம் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று கழிவறை இடிக்கப்பட்ட பகுதியில் பாஜக கொடி ஏற்றப்பட்டதால் திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலமேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் சீராளன் உத்தரவின் பேரில், வி.களத்தூர் காவல்துறை நேற்று நள்ளிரவு வாலிகண்டபுரம் கிராமத்திற்கு சென்று பாஜக மாவட்ட தலைவரான செல்வராஜை கைது செய்தனர். மேலும் மரவநத்தம் கிராமத்தை சேர்ந்த பாஜக கிளை நிர்வாகிகளான சுரேஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக வி.களத்தூர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவம் வேப்பந்தட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.