பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடி..!

பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பழைய நாணயங்கள் வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் என மூட்டை தூக்கும் தொழிலாளி ராஜன் என்பவரின் செல்போனுக்கு தொடர்ந்து விளம்பரம் வந்துள்ளது.

தொழிலாளி ராஜன் விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி பேசியுள்ளார். இந்திரா காந்தி உருவம் பொறித்த நாணயத்தின் படத்தை தனக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப ராஜனிடம் கூறியுள்ளனர். நாணயங்களின் படத்தை அனுப்பிய பிறகு 2 பெண்கள் தொடர்பு கொண்டு ரூ.36 லட்சத்திற்கு விற்கலாம் என கூறியுள்ளனர்.

அரசின் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் என்பதால் பதிவுக் கட்டணம் செலுத்த கூறியுள்ளனர். பெண்கள் கூறியதை நம்பி ராஜன் 22 தவணைகளில் 3.82 லட்சத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் மேலும் ராஜனிடம் பணம் கேட்டபோது, தான் ஏமாந்ததை உணர்ந்தார். மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முடியாததை அடுத்து சேலம் சைபர்கிரைமில் தொழிலாளி ராஜன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட ஜெயவேரியாபானு, அர்ஷியாபானு, செர்ஷாகான், முகமது இம்ரான் மற்றும் திலீப்  ஆகியோர் சைபர் கிரைம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 5 பேரிடம் விசாரணை மோசடி செய்வது குறித்து ஹரியானாவில் பயிற்சி பெற்றது தெரியவந்தது.

உஷாரய்யா..! உஷார்..!! ஆன்லைன் மூலம் போலி பணி நியமன கடிதம் அனுப்பி ரூ.16¼ லட்சம் மோசடி..!

கோயம்புத்தூர் சாய்பாபாகோவில் அருேக கே.கே.புதூரை சேர்ந்த பி.இ. மெக்கானிக்கல் படித்து பிரித்திவ். இவர் கடந்த மே மாதம் முதல் வேலை தேடி வருகிறார். பிரித்திவ் செல்போனில் ஆன்லைனில் வேலை எதுவும் உள்ளதா? என்று பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தார். அதில் பிரபல முன்னணி நிறுவனங்களில் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. இதையடுத்து அவர் தனது விவரங்களை ஆன்லைனில் அனுப்பினார். விண்ணப்பித்த சில நாட்களில் அந்த ஆன்லைன் தளத்தில் இருந்து பிரித்திவின் மெயிலுக்கு ஒருவர் தகவல் அனுப்பினர்.

அதில் அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வேலை உள்ளது என தெரிவித்தார். இதனை நம்பிய பிரித்திவ் ஆன்லைன் வழியாக அவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் நேர்முகத்தேர்வு நடத்தினர். இதில் வெற்றி பெற்றதால் வேலைக்கு சேர்வதற்கான பணிநியமன கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவும், தபால் மூலமும் அனுப்பி உள்ளனா். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு ஆன்லைனில் சில நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து சில வேலைகள் உங்களுக்கு என்று கொடுக்கப்படும். அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். வேலைக்கு சேரும் முன்பு ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பயிற்சி, கார் நிறுவனத்தில் பணி என்பதால் உங்களுக்கு என்று தனியாக டூல்ஸ் வாங்க குறிப்பிட்ட தொகை உள்பட அனைத்துக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.

வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிய பிரித்திவ், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வாங்கி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக கடந்த 27-5-2023 முதல் 16-6-2023 வரை ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 277-ஐ அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பலமுறை மெயில் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரித்திவ் பணி நியமன கடித்தத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது தான் அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரித்திவ், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.

உஷாரய்யா….உஷார்…! தொடரும் ஆன்லைன் மோசடிகள் …!

கோவை ஓம்நகர் சிவாஜி காலணியைச் சேர்ந்த தீபக் என்பவர் கார், பைக்கிற்கு வாட்டர் வாஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்குக் கடந்த மாதம் குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தீபக் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.

அதில் தனது விவரங்களைப் பதிவிட்டார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும், கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறினார். இதனையடுத்து தீபக் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு முதலில் சிறிய தொகையை அனுப்பி அவர்களின் பணிகளை ஆன்லைனில் செய்து கொடுத்தார்.

அப்போது அவருக்குக் குறிப்பிட்ட தொகை லாபம் கிடைத்தது. பின்னர் தீபக்கைத் தொடர்பு கொண்ட நபர் அதிகளவில் முதலீடு செய்தால் இதனை விட அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீபக் சிறிது, சிறிதாக ரூ. 14,12,500 முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு எந்த விதமான கமிஷனும், லாப தொகையும் கிடைக்கவில்லை.

பின்னர் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ஆன்லைன் வேலை எனக் கூறி மொத்தமாக ரூ. 14,12,500 சுருட்டி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை…!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். அது நேராக ஒரு கடன் செயலிக்கு சென்றது. இதனால் தனது தேவைக்காக ராஜேஷ் கடன் வாங்கினார். இந்த நிலையில் வாங்கிய கடனை வட்டி, அசலுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே திருப்பி கொடுத்துவிட்டாராம். ஆனாலும் ஆன்லைன் மூலம் கடன் வழங்கிய லோன் ஆப் நிறுவனத்தினர் வாட்ஸ் ஆப் மூலம் ராஜேஷை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் வந்து ராஜேஷை வீடியோ எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதை நிர்வாணமான ஒரு உடலுடன் ஒட்டி அதை காட்டியும் ராஜேஷை மிரட்டியுள்ளனர். ஆனால் ராஜேஷோ எல்லா பணத்தையும் கொடுத்த பிறகும் மீண்டும் எதற்காக பணம் கேட்கிறீர்கள். மீண்டும் பணம் கேட்டால் செலுத்த முடியாது என்றாராம். இதனால் ஆத்திரமடைந்த லோன் வழங்கிய நிறுவனத்தினர் ராஜேஷின் உறவினர்களுக்கெல்லாம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பினர்.

இதையடுத்து சொந்தக்காரர்கள் எல்லாம் ராஜேஷை ஒரு மாதிரியாக பேசியதாக கூறப்படுகிறது. இத்துடன் விடாமல் லோன் ஆப் நிறுவனம் நீ நாங்கள் கேட்கும் பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளங்களில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். ராஜேஷை மீட்ட உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அப்போது ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த வலங்கைமான் காவல்துறை ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஷ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் அவருக்கு வந்த வாட்ஸ் ஆப் கால் அனைத்துமே தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டில் இருந்தபடியே தினமும் சம்பாதிக்க.. புதிய வகை மோசடி…

வெளிநாட்டில் இருந்து வேலை கொடுப்பதாக கூறி ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று சொல்லி ஆன்லைன் மூலம் நம்முடைய பணத்திற்கு ஆப்பு வைக்கின்ற மோசடி கும்பல் புதுவகை மோசடி அரங்கேறி வருகிறது. ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சொல்வார்கள். இன்று ஆன்லைனில் பணம் திருடும் மோசடி கும்பல் பலரும் பலருக்கும் ஆசையை விதைத்து பணத்தை அறுவடை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆன்லைன் லோன் ஆப்கள் ஒருபக்கம் ஏற்றி வருகிறது என்றால் இப்பொது புதுவிதமாக வேலை தேடுபவர்களை குறிவைத்துள்ளது மற்றொரு கும்பல். குறிப்பாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைப்பவர்களை குறி வைத்து இந்த மோசடி கும்பல் ஆன்லைன் மூலம் வலை விரிக்கிறது. இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்க் உடன் தகவல் அனுப்புகிறார்கள்.

அதில் நீங்கள் வேலை தேடும் நபர் என்பதை அறிகிறோம், எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது அதில் உங்களுக்கு பணியாற்ற விருப்பம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே தினமும் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த லிங்கை தொட்டால் telegram செயலியில் உள்ள குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதன்பிறகு எங்கள் நிறுவனத்தில் இணைந்ததற்கு நன்றி நாங்கள் பதினைந்து வகையான மிகவும் எளிதான டாஸ்க்குகளை தருகிறோம் அதில் வெற்றி பெற்றால் 30 சதவீதம் கமிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்பணமாக 500 ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம் எனவும் உங்கள் வங்கி கணக்கு ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களை அனுப்பும்படி கேட்கிறார்கள். அதன் பிறகு ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள் கமிஷன் தொகையுடன் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முன்பணம் கொடுத்த பிறகு உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி விட்டு தொடர்பை துண்டித்து விடுவார்கள்.

இந்த மோசடி அதிக அளவு பெண்கள் மற்றும் வேலை தேடும் வரை குறி வைத்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பல மோசடி தொடர்பாக உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.