புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இஸ்ரோ மையத்தில் பேசிய எஸ்.சோம்நாத், “ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல்-1 தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாட்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து லாக்ராஞ்சின் எல்-1 இலக்கை எட்டும்.

இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்த ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஆதித்யா எல்-1 பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்நாளில் இன்னொரு தகவலையும் பகிர விரும்புகிறேன். சந்திரயான்-3 லேண்டர், ரோவரை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளோம். நிலவின் இரவை அவை தாங்கி மீண்டுவரும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.