ரூ.2.35 கோடி பணத்தை ஆட்டைய போட்ட பெண் வருவாய் ஆய்வாளர் கணவருடன் கைது..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக சீதாப்பிரியா பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 2017 முதல் 2023 வரை ஆதிதிராவிடர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்ததாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆட்சியர் நடத்திய விசாரணையில் சீதாப்பிரியா ரூ.9 லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்தை சீதாப்பிரியா திரும்ப செலுத்தினார்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் உமாமகேஸ்வரி, சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மோசடி குறித்து தொடர் விசாரணை நடத்த ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

இதில் சீதாப்பிரியா ரூ.2 கோடியே 35 லட்சத்து 36 ஆயிரத்து 468 வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை வங்கி கணக்கின் மூலம் சீதாப்பிரியாவின் கணவர் ராம்குமார் உள்பட 4 பேரின் வங்கி கணக்குக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றி எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார்.

மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை முதற்கட்டமாக நேற்று சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமாரை கைது செய்தனர். இந்த பணமோசடி வழக்கில் மேலும் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதால் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.