ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் பறிமுதல்..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையர் அவர்கள் கட்டிடங்கள் புனரமைப்பதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக ஜஹாங்கீர் பாஷா மீது அதிகம் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து தனியார் வாடகை காரில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர், சிலரிடம் லஞ்சம் பணம் பெற்று கொண்டு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அந்த காரை விரட்டி சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கி சோதனையிட்டனர். அப்போது அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று சுமார் 13 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது அலுவலக அறையில் இருந்து ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

K. Balakrishnan: துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எங்களது கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரிப்பன் மாளிகை அருகே எனது தலைமையில் போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள விக்டோரியா கட்டிட நுழைவுவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்துக்காக கட்சியினர் கூடினர். காலை சுமார் 11 மணி அளவில் அப்பகுதிக்கு நானும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சென்றோம்.

அப்போது கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தெரிவித்தார். துணை ஆணையர் ரகுபதி கூறியபடி, கட்சியினர் 50 மீட்டர் தள்ளிச் சென்றனர். ஆனால், துணை ஆணையர் மேலும் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறையினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் உள்ளிட்டவர்களை பிடித்துத் தள்ளிவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, எங்களை ஒருமையில் பேசியும், கையால் தள்ளியும், அடாவடித்தனமாகச் செய்தனர்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது `கைது செய்ய வேண்டிவரும்’ என மிரட்டும் வகையில் சத்தமிட்டார். கடைசி வரையில் காவல் துறையினரை வைத்து சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் சரியாக நடத்துவதற்கே அவர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு கிளம்பிய என்னைக் கைது செய்வதாகக் கூறி, வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது. எனவே, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் தெரிவிக்கப்படுள்ளது.