ஆடி மாத திருவிழாவில் தலித்துகள் வழிபட்டதால் கோவில்லை இடித்து தள்ளிய அவலம்..!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கெம்மன்குப்பம் என்ற கிராமத்தில் யாதவர்கள், வன்னியர்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் நடைபெறும் காளியம்மன் கோவிலின் ஆடி மாத விழாக்களில், பட்டியல் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது என்ற மற்ற சாதியனர் சேர்ந்து முடிவெடுத்தார்கள். ஊர் கட்டுப்பாடாக இதனை அறிவித்தார்கள். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் மீறியதால், கடந்த வாரம், கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள கெம்மன்குப்பம் கிராமத்திற்கு அருகிலுள்ள காளியம்மன் கோவிலை குறிப்பிட்ட சாதி இந்துக்கள் இடித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தலித்துகள் புகார் அளித்த நிலையில், ஒரு வார காலத்தாமதத்திற்கு பிறகு கே.வி.குப்பம் காவல்துறை, குறிப்பிட்ட இடைநிலை சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, சமீபத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 14 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.