யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்கம் என்ற போர்வையில் பல வித்தைகளை காட்டி பணம் சுருட்டிய 2 ஆசாமிகள் கைது..!

பத்திரிகையாளர் சங்கம் என்ற போர்வையில் பள்ளி, கல்லூரிகளுக்கான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தும் எல்எல்பி பட்டம் வாங்கி கொடுத்தும் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட டு 2 பேரை கைது செய்தனர்.

வடசென்னை பகுதியில் பெரும்பாலான வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சென்றவர்களை காவல்துறை பிடித்து விசாரித்தபோது அவர்கள் போலி பத்திரிகையாளர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு காவல்துறை வடசென்னையில் செயல்பட்டு வரும் பத்திரிகையாளர் சங்கங்கள், மாத பத்திரிகைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வில்லிவாக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் எந்த சான்றிதழ் கேட்டாலும் தயார் செய்து கொடுப்பதாகவும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து வசூல் செய்வதாகவும் ராஜமங்கலம் காவல்துறைக்கு தெரியவந்தது. மேலும் வழக்கறிஞர் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், 13-வது நீதிமன்ற நடுவர் தர்மபிரபுவுக்கு தகவல் தெரிவித்ததுடன் அவரது அனுமதி பெற்று வில்லிவாக்கம் பாலாம்பிகை நகர் பகுதியில் உள்ள யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பள்ளி, கல்லூரிகள் வழங்கும் சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து கொடுத்ததற்கான ஆவணங்கள், பல்வேறு இடத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஆந்திராவில் எல்எல்பி படிப்பிற்கான ஆவணங்கள் என்று போலி ஆவணங்கள் ஏராளமான இருந்தன. அங்கிருந்து லேப்டாப், இரண்டு செல்போன்கள், பென்டிரைவ், டிவிஆர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்கத்தை நடத்திவந்த விநாயகபுரம் பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த், பொருளாளராக செயல்பட்ட ஆவடி மெஜஸ்டிக் நகர் பகுதியை சேர்ந்த ரூபன் ஜெர்மையா ஆகியோரை கைது செய்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலி ஆவணங்களை தயாரித்து வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எங்கெங்கு காலி பணியிடங்கள் உள்ளதோ அதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிந்துகொண்டு குறிப்பிட்ட அந்த வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். 10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆந்திராவில் எல்எல்பி படிப்பு முடித்தது போன்ற சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். பெரிய பல்கலைக்கழகங்களின் லோகோ முத்திரைகளை பயன்படுத்தி பி.எச்.டி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

இதில், ரூபன் ஜெர்மையா தன்னை வழக்கறிஞர் என்று பொய் கூறியுள்ளார். விஜய் ஆனந்த் எல்எல்பி படித்து முடித்து விட்டதாக ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்க பெயரை வைத்து மாதந்தோறும் மாத பத்திரிக்கை ஒன்று நடத்தி ஏராளமானவர்களை பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் எனக்கூறி பிரஸ் என்ற அடையாள அட்டையை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதற்காக இவர்கள் 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். போலி சான்றிதழ்கள் கேட்டு வரும் நபர்களிடம் 10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.