செருப்பு மாலையுடன் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பூட்டுக்கும், கல்வி மற்றும் மதக்கலவரங்களுக்கும் பெயர்போன நகரம் அலிகர். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சரிபாதியாக வாழ்கின்றனர். அலிகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸுக்கு அலிகர் ஒதுக்கப்பட்டு நிலையில் வேட்பாளராக இரண்டு முறை எம்.பி.,யான ஜாட் சமூகத்தின் சவுத்ரி விஜயேந்தர் போட்டியிடுகிறார்.

இதேபோல், பாஜகவிலும் இரண்டுமுறை எம்.பி.,யான சதீஷ் கவுதம் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியில் உள்ளார். மாயாவதியின் பிஎஸ்பியில் பண்டி உபாத்யா எனும் ஹிதேந்தர் குமார் போட்டியிடுகிறார். இதனால், மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியில், பிரதான கட்சிகள் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை.

உத்தரப்பிரதேசம் அலிகர் தொகுதி தேர்தல் ஒருபுறம் செருப்பு மாலை அணிந்து ஒரு வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்றால் மறுபுறம் பிரதான கட்சிகளில் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என கள நிலவரம் பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டு கவனம் ஈர்த்துள்ளது.

14 வேட்பாளர்களில் கேசவ் தேவ் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். கேசவின் சுயேச்சை சின்னமாக தலைமைத் தேர்தல் ஆணையம் செருப்புச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த செருப்பை கையால் எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சிக்கல் என்பதால், செருப்பு மாலையை கழுத்தில் அணிந்து கேசவ் செய்யும் பிரச்சாரம் வியப்பை ஏற்படுத்துகிறது. இத்துடன் மலர் மாலையும் அணிந்து கேசவ் செய்யும் பிரச்சாரம் வியப்பை ஏற்படுத்துகிறது.