போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கிய ஓட்டுநரின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தை ஓட்டுநர் குடிபோதையில் இயக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி செல்வதற்காக 35 பயணிகளுடன் நேற்று அரசு பேருந்து புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், பேருந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து உடுமலை ரோடு கோமங்கலம் புதூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது, ஓட்டுநர் அருள் மூர்த்தி மது போதையில் இருக்கையிலேயே தள்ளாடினார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் என்னவென்று பார்த்தபோது ஓட்டுநர் இயல்பான நிலையில் இல்லை என தெரிய வந்துள்ளது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது, மது போதையில் உளறியபடி பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால், பேருந்தை ஓட்டுநர் இயக்க முடியாமல் நடுவழியில் நிறுத்திவிட்டு மது போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கி உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.