அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இன்று அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு பணிக்கான திறன் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாணவ மாணவிகளிடம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகள், வன்கொடுமை மற்றும் தீருதவி பற்றியும், பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை, தாட்கோ உதவி திட்டங்கள், தொழிற் பயிற்சிகள், கடன் உதவி சலுகைகள் பற்றியும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், தீண்டாமை நடைபெறாமல் தடுப்பதற்காகவும் அரசின் துறைகள் என்னென்ன செயல்படுகிறது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் துண்டு பிரசுரங்களாக வழங்கப்பட்டன. சமுதாயத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும், போக்சோ சட்டம், குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, SC/ST க்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பதற்கான உதவி எண் 14566, இணையவழி புகார் உதவி எண் 1930, பெண்கள் பாதுகாப்பு உதவி 181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண் : 1098, மற்றும் மதுவிலக்கு தொடர்பான புகார் உதவி எண் :10581 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அரியலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட 3 புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 38. 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நியாய விலைக் கடைகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட தாமரைக்குளம், ஓட்டக் கோவில், விழுப்பணங்குறிச்சி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 38. 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நியாய விலைக் கடைகளை சிறப்பு அழைப்பாளராக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு புதிய நியாய விலைக் கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, தொடர்ந்து குத்து விளக்கேற்றி, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவிற்கு கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சாய் நந்தினி முன்னிலை வகித்தார்.முன்னதாக திறப்பு விழாக்களில் கலந்து கொண்ட அனைவரையும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் மேலாளர் சக்திவேல் வரவேற்றார்.

இந்த விழாவில் மதிமுக மாவட்ட செயலாளர் க. இராமநாதன், வட்ட வழங்கல் அலுவலர் எம்.எஸ். ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யா மொழி, குருநாதன், அரியலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ. அறிவழகன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் பி. சங்கர், ரமேஷ் பாபு, கூட்டுறவு சார்பதிவாளர்கள் சசிகுமார், சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாப்பாள் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அரியலூர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் உடனடி அ- பதிவேடு வழங்கிய ஆட்சியர்

அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சியில் பயனாளிக்கு உடனடி அ- பதிவேட்டை ஆட்சியர் பொ. இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் இன்று முதல் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் நாளில் அரியலூர், பொட்டவெளி, பெரிய இலுப்பையூர், இராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன் ஆத்தூர், நாகலூர், தேளுர், காவனூர் மற்றும் விளாங்குடி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 260 மனுக்களை வழங்கினர்.

மேலும் இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கண்டு ஒரு பயனாளிக்கு உடனடி அ- பதிவேட்டை மாவட்ட ஆட்சியர் .பொ. இரத்தினசாமி அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட ஆட்சியரக மேலாளர் குமரையா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி, தனி வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுதிறனாளி குழந்தைக்கு காதொலி கருவினை ஆட்சியர் பொ. இரத்தினசாமி வழங்கல்

தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறுவது வழங்கமான ஒன்றாகும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் , உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். சில சமயங்களில் குறைதீர்வு கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருக்கும் அதிகாரிகளுடன் தகராற்றில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்வதுண்டு. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச காதொலி கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. அந்த கூட்டத்தில் ஆட்சியர் பொ.இரத்தினசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு காதொலி கருவினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி அவர்கள் வழங்கினார்.

அரியலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை அமைச்சர் KN. நேரு ஆய்வு

அரியலூரில் புதிதாக ரூ 11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் KN. நேரு ஆய்வு செய்தார். அரியலூரில் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தற்போதைய பேருந்து நிலையத்திற்குப் பதிலாக அரியலூர் நகராட்சியால் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் இந்தத் திட்டத்திற்காக ₹7.80 கோடியை ஒதுக்கியது.

திட்டத்தின் முதல் கட்டமாக 21 பேருந்து நிறுத்துமிடங்கள், 30 கடைகள், ஒரு நிர்வாக அறை, ஒரு உணவகம், நேரக் கட்டுப்பாட்டு அலுவலகம், டிக்கெட் முன்பதிவு கவுண்டர், ஒரு தானியங்கி பணம் செலுத்தும் இயந்திர அறை மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டத்தில், மூலதன மானியத்தின் கீழ் ஆறு பேருந்து நிறுத்துமிடங்கள், 15 கடைகள், ஒரு நர்சிங் அறை மற்றும் கழிப்பறைகள் கட்ட ₹3.78 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அரியலூரில் புதிதாக ரூ 11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் KN. நேரு, போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் S. S. சிவசங்கருடன் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டி ய பணிகளின் விபரம் குறித்தும் அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்க.சொ.க. கண்ணன், அரியலூர் நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார், நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக், அரசு அலுவலர்கள், மாநில திமுக சட்டதிட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர்,  நகர பொருளாளர் மா. இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி ஆய்வு

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். தமிழ்நாடு பள்ளிப் பேருந்துகள் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு சிறப்பு விதிகள், 2012 -இன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு சோதனைகளை மாவட்ட அளவிலான குழுவால் கட்டாயமாக்குகிறது.

அந்த ஆய்வின் போது, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், அவசரகால வெளியேற்றங்கள், கதவு வழிமுறைகள், ஜன்னல்களில் பாதுகாப்பு கிரில்கள், இருக்கை ஏற்பாடுகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், ஃபுட்போர்டுகள் மற்றும் பிரதிபலிப்பு நாடாக்கள் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். சிசிடிவி கேமராக்கள், நேரடி காட்சி மானிட்டர்கள், ஓட்டுநர் உரிமங்கள், அனுமதி மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் உமிழ்வு சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

விழுப்புரம் தாலுகா கெடார் அடுத்த அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் விழுப்புரத்தை சேர்ந்த சங்கீதா. திருக்கை அருகே நகர் கிராமத்தை சேர்ந்த அருளாந்து மனைவி அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம், அவரது கணவரின் அண்ணன் சவுரிமுத்து ஆகிய இருவரும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அப்போது இவர்கள் இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய தவறிவிட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு தனித்தனியே விழுப்புரம் கோட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுத்துள்ளார். அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை நேரில் சந்தித்து இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக ஆன்லைனில் பதிவு செய்ய அன்னம்மாள் கேட்டுள்ளார். அப்போது அன்னம்மாளிடம் மனு கொடுத்து கண்டுகொள்ளாமல் விட்டால் எப்படி, ஆன்லைனில் பதிவு செய்வது நான் தான் என்றும் ஆன்லைனின் பதிவு செய்ய தலா 500 வீதம் இருவருக்கும் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விருப்பமில்லாததால் அன்னம்மாள், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான காவல்துறை ரசாயனம் தடவிய ரூ.1,000 பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.

இதையடுத்து நேற்று மதியம் அன்னம்மாள் கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது கிராம நிர்வாக அலுவலர் அதனை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை காவல்துறை கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.